7-ந் தேதி வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி


7-ந் தேதி வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி
x

கோப்புப்படம்

வங்கக்கடலில் வருகிற 7-ந் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் (அக்டோபர்) 15-ந் தேதி தொடங்கியதாக அறிவிக்கப்பட்டாலும், கிழக்கு திசை காற்று முழுமையாக தென் இந்திய பகுதிகளில் பரவி பருவமழை முழுவதுமாக தொடங்க உள்ளது. அதன்படி, தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்களில் 5-ந் தேதி அதிகாலையில் இருந்தே மழைக்கான வாய்ப்பு தொடங்கிவிடும் என்றே சொல்லப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக தென் இந்திய பகுதிகளில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

இந்த நிலையில் பருவமழையின் தீவிரத்தை காட்டும் வகையில் வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

அந்த வகையில் தெற்கு வங்கக்கடலில் வருகிற 7 அல்லது 8-ந் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது தொடர்ந்து வலுப்பெற்று வட தமிழக பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஒட்டுமொத்தமாக நவம்பர் மாதத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கடலோர ஆந்திரா, ராயல்சீமா, கேரளா உள்ளிட்ட தென் இந்தியாவில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. அதாவது இயல்பைவிட 23 சதவீதம் அதிகமாக மழை பொழிவு இருக்கும் என சொல்லப்பட்டு உள்ளது. இதில் நவம்பர் முதல் வாரத்தில் இயல்புக்கு குறைவாகவும், 2-வது வாரத்தில் இயல்பைவிட அதிகமாகவும் மழை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

தமிழ்நாட்டை பொறுத்தவரையில், இன்று (சனிக்கிழமை) அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story