தலையங்கம்

ஒரே நாடு, ஒரே தேர்தல் ; போகும் பாதை தூரம் !


One country, one election; long Way to go!
20 Sept 2024 6:37 AM IST

2014-ல் பா.ஜனதா தேர்தல் அறிக்கையிலும், “ஒரே நாடு; ஒரே தேர்தல்” வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

சென்னை,

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல்கள் தனித்தனியாக நடக்கின்றன. இவ்வாறு 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களுக்கு வெவ்வேறு சமயத்தில் தேர்தல் நடத்தப்படுவதால், இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அதிக பொருட்செலவு ஏற்படுகிறது. வழக்கமான பணிகளை விட்டுவிட்டு, போலீசார், ராணுவத்தினர், துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியிலும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வாக்குப்பதிவு வேலையிலும் ஈடுபட வேண்டியுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளும் அமலில் இருக்கும் என்பதால், அரசின் திட்டங்களையும் செயல்படுத்த முடியாது.

இதுபோன்ற நிலைகளை தவிர்க்க, ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தலை நடத்துவதே சாலச்சிறந்தது என்று 1999-ம் ஆண்டே சட்டக்கமிஷன் கருத்து தெரிவித்தது. அதன் பிறகு, பல கட்சி தலைவர்களால் பேசப்பட்டது. 2014-ல் பா.ஜனதா தேர்தல் அறிக்கையிலும், "ஒரே நாடு; ஒரே தேர்தல்" வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆட்சிக்கு வந்த பிறகு, இதுகுறித்து ஆராய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு உயர் மட்டக்குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு 191 நாட்களில் 65 கூட்டங்களை நடத்தி பொதுமக்கள், அரசியல் கட்சிகள், முன்னாள் நீதிபதிகள், தொழில் துறையினரிடம் கருத்து கேட்டது. மொத்தம் 21,588 கருத்துகள் பெறப்பட்டன. இதில் 80 சதவீத கருத்துகள், "ஒரே நாடு; ஒரே தேர்தல்" நடைமுறைக்கு ஆதரவாக இருந்தன. 47 அரசியல் கட்சிகளில் 32 கட்சிகள் ஆதரவாகவும், 15 கட்சிகள் எதிராகவும் தங்கள் கருத்துகளை பதிவு செய்திருந்தன.

இந்த நிலையில், 18,626 பக்கங்களைக் கொண்ட இந்த குழுவின் அறிக்கை கடந்த மார்ச் மாதம் ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் வழங்கப்பட்டது. இப்போது இந்த அறிக்கைக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. ஆக, "ஒரே நாடு; ஒரே தேர்தல்" என்ற தனது கொள்கையில் பா.ஜனதா அரசு முதல் அடியை எடுத்து வைத்துவிட்டது. இனி நாடாளுமன்றத்தில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு, அரசியல் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படும். அவை நிறைவேற்றப்பட்டால், ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டசபை தேர்தல்களை நடத்தி முடிப்பதுடன், அடுத்த 100 நாட்களில் உள்ளாட்சி தேர்தல்களையும் நடத்த முடியும்.

இந்த 3 தேர்தல்களுக்கும் வாக்காளர் பட்டியல் ஒன்றுதான். தேர்தல் நடத்துவதில் இதுவொரு நல்ல முறை என்றாலும், அரசியல் சட்டத்தில் திருத்தங்கள் செய்து நடைமுறைக்கு கொண்டுவருவது என்பது எளிதல்ல. மக்களவையிலும், மாநிலங்களவையிலும் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றவேண்டும். அதாவது, மக்களவையில் 362 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 156 உறுப்பினர்களும் ஆதரவு தெரிவிக்கவேண்டும். ஆனால், இப்போது மக்களவையில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 293 உறுப்பினர்களும், காங்கிரஸ் தலைமையிலான 'இந்தியா' கூட்டணிக்கு 240 உறுப்பினர்களும் உள்ளனர். இதுபோல, மாநிலங்களவையில் பா.ஜனதா கூட்டணிக்கு 126 உறுப்பினர்களும், 'இந்தியா' கூட்டணிக்கு 108 உறுப்பினர்களும் உள்ளனர்.

அந்த வகையில், மாநிலங்களில் 50 சதவீத ஆதரவை பெறுவது என்பது பா.ஜனதாவுக்கு எளிதானது. மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இந்த திருத்தங்களை நிறைவேற்ற எதிர்க்கட்சிகளின் ஆதரவு இருந்தால் மட்டுமே முடியும். எனவே, "ஒரே நாடு; ஒரே தேர்தல்" என்னும் பாதைக்கு இன்னும் போகவேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது. அதுவும் கடினமான பாதையாகவே தெரிகிறது. அப்படியே நிறைவேறி 2029-ல் "ஒரே நாடு; ஒரே தேர்தல்" நடைமுறைக்கு வந்தால், தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டும், மீண்டும் 2029-ம் ஆண்டும் சட்டசபை தேர்தல் நடக்கும்.