குடிபோதையில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர்கள் கைது

குடிபோதையில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் மயிலம் பகுதியை சேர்ந்த மாணவி புதுச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு நர்சிங் படித்து வருகிறார். சம்பவத்தன்று காலை மாணவி கல்லூரிக்கு செல்வதற்காக தனது ஊர் பஸ் நிறுத்தத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அரசு பள்ளி அருகே வந்தபோது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென மாணவியை வழிமறித்து அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிா்ச்சி அடைந்த மாணவி கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த கிராமமக்கள் 2 வாலிபர்களையும் மடக்கி பிடித்து மயிலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் கண்ணியம் கிராமம், ரெட்டியார் தெருவை சேர்ந்த முனுசாமி மகனும், டிரைவருமான விக்கி என்ற ஞானமூர்த்தி (வயது 22), திருவள்ளூர் மாவட்டம், நசரத்பேட்டை, ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த ஜெகநாதன் என்பவரின் மகனும் எலக்ட்ரீசியனுமான யுவராஜ்(23) என்பது தெரியவந்தது.
இருவரும் குடிபோதையில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து ஞானமூர்த்தி உள்பட 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.