பால்கனி இடிந்து விழுந்து வாலிபர் பலி: சென்னை பட்டினப்பாக்கத்தில் மக்கள் சாலை மறியல்
சென்னை பட்டினப்பாக்கத்தில் பால்கனி இடிந்து விழுந்து வாலிபர் பலியானார்.
சென்னை,
சென்னை பட்டினப்பாக்கம் அடுத்த சீனிவாசபுரத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் நான்காவது தளத்தில் நேற்று இரவு பால்கனி இடிந்து விழுந்து குலாப் (24) என்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். நிச்சயதார்த்தம் நடைபெற்று, நான்கு மாதத்தில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பட்டினப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பால்கனி இடிந்து விழுந்து வாலிபர் உயிரிழந்ததை கண்டித்து வாலிபரின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், அப்பகுதி மக்கள் என பலரும் பட்டினப்பாக்கத்தில் உள்ள முக்கிய சாலை இறங்கி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கலங்கரை விளக்கம் லூப் சாலையில் இருந்து அடையாறு வரை வாகனங்கள் நகர முடியாமல் வரிசை கட்டி நின்றன. பலரும் வாகனங்களை ஓரமாக நிறுத்திவிட்டு, அலுவலகங்களுக்கு நடந்தே சென்றனர்.
சென்னையின் முக்கிய சாலைகள் ஸ்தம்பித்ததால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் அதிகாரிகள் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உயிரிழந்த குலாப் என்ற வாலிபரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட வாக்குறுதிகள் அளித்ததன் அடிப்படையில் போராட்டத்தை மக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர். அதனை தொடர்ந்து போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் காவலர்கள் ஈடுபட்டனர்.