பல ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய இளம்பெண் கைது
பல ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திட்டை ஊராட்சி குளங்கரை தெருவை சேர்ந்தவர் ஜீவா மகன் சிவசந்திரன். தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். சிவசந்திரனின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால் சிதம்பரம் ராஜா முத்தையா ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்போது நிஷாந்தி என்பவர் தான் டாக்டராக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் வேலை பார்த்து வருவதாக சிவசந்திரனிடம் அறிமுகம் செய்து கொண்டுள்ளார். இதையடுத்து இருவரும் பழகி வந்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து கடந்த 20-ந் தேதி சீர்காழியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் சிவசந்திரன்-நிஷாந்திக்கு முறைப்படி திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டிருந்தது. இதைக்கண்ட சீர்காழி அருகே புத்தூர் வாய்க்காங்கரை தெருவை சேர்ந்த தங்கராசு மகன் நெப்போலியன் ( 34) சீர்காழி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.
அந்த புகாரில் கடந்த 2017-ம் ஆண்டு மீரா என்ற பெயரில் இந்த பெண் தன்னிடம் அறிமுகமாக இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டோம். இதையடுத்து கடந்த 2021-ம் ஆண்டு சென்னையில் வசித்து வந்த போது மீரா ஒன்றும் சொல்லாமல் என்னை விட்டு சென்று விட்டார். அதன் பிறகு அவரை நான் தொடர்பு கொள்ள முடியவில்லை இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் மீரா சீர்காழியை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். எனவே தன்னை ஏமாற்றிய மீரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
புகாரின் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பலதா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து லட்சுமி என்கின்ற நிஷாந்தியை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது. விசாரணையில் கொடியம்பாளையம் கிராமத்தை சேர்ந்த லட்சுமிக்கும் பழையாறு கிராமத்தை சேர்ந்த சிலம்பரசனுக்கும் முறைப்படி கடந்த 2017-ம்ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு தர்ஷன் என்கின்ற மகனும், ரேணுகா என்கின்ற மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் இறந்து விட்டதால் பெண்குழந்தையை இறந்து போன கணவரின் அண்ணன் ஜெயக்குமார் பராமரிப்பில் விட்டுவிட்டு, ஆண் குழந்தையுடன் கொடியம்பாளையத்தில் உள்ள இவரது அம்மா வீட்டில் தங்கி வசித்து வந்துள்ளார். பின்னர் தனது பெயரை மாற்றிக் கொண்டு 2017-ம் ஆண்டு புத்தூர் கிராமத்தை சேர்ந்த நெப்போலியனை திருமணம் செய்துவிட்டு 2021-ம் ஆண்டு தலைமறைவாகி விட்டார். இதையடுத்து கடலூர் மாவட்டம் சிதம்பரம் கோல்டன் நகரை சேர்ந்த நடராஜன் மகன் ராஜாவிடம் தான் டாக்டர் என கூறி குடும்பம் நடத்தி அங்கிருந்தும் தலைமறைவாகி உள்ளார்.
இதேபோல் ஈரோடு மாவட்டத்திலும் ஒருவரை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் நிஷாந்தி என்ற பெயரில் தன்னை ஏமாற்றிய பெண் குறித்து சிவசந்திரனும் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் பல ஆண்களை பல பெயர்களில் ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட லட்சுமியை கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். பல ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய இளம்பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.