உழவரைப் போற்றுவதும், தாயைப் போற்றுவதும் வேறல்ல: கமல்ஹாசன்
உழவரைப் போற்றுவதும், தாயைப் போற்றுவதும் வேறல்ல என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழர்களின் கலாசாரம் மற்றும் பண்பாட்டின் அடையாளமாக பொங்கல் பண்டிகை திகழ்கிறது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் வசித்து வரும் தமிழர்கள், ஜாதி, மதம் கடந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்றனர். போகி பண்டிகை, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல், உழவர் திருநாள் என நான்கு நாட்கள் பாரம்பரியம் மாறாமல் கொண்டாடப்படும் இந்த பண்டிகை தமிழர்களின் தனிப்பெரும் விழாவாகும்.
அதன்படி, இன்று உழவர் திருநாள் கொண்டாடப்படுவதையொட்டி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
இந்தத் தேசத்துக்கு விடுதலை கிடைத்த போது மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு ஒரு வேளை உணவுக்குக் கூட வழியில்லை. 'பஞ்சப் பராரிகளின் நாடு' என இழிவு செய்யப்பட்ட நாம் பசியை வென்றதற்கு ஒரே காரணம் நமது விவசாயிகள்.
'நாட்டுப்புறத்தான்' தன் காட்டுக்குச் செல்வதால்தான் நம் வீட்டுக்குள் பசி இல்லை என்பதை உணர்வதும்; உழவர்களுக்கு ஒன்றென்றால் அவர்களுக்கு உடன் நிற்பதும்தான் நம் நன்றியைக் காட்டும் வழிகள். உழவரைப் போற்றுவதும், தாயைப் போற்றுவதும் வேறல்ல. உழவர் திருநாள் வாழ்த்துகள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.