முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உலக செஸ் சாம்பியன் குகேஷ் நன்றி


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உலக செஸ் சாம்பியன் குகேஷ் நன்றி
x

உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் தமிழகத்தின் குகேஷ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி புதிய சரித்திரம் படைத்தார்.

சென்னை,

சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 14-வது மற்றும் கடைசி சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், உலக சாம்பியன் டிங் லிரெனை (சீனா) சாய்த்தார். இதன் மூலம் 18 வயதான சென்னையை சேர்ந்த குகேஷ் 7½-6½ என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சரித்திரம் படைத்தார்.

இளம் வயதில் உலக செஸ் அரங்கில் தடம் பதித்துள்ள குகேஷ் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், '18 வயதிலேயே உலக செஸ் சாம்பியனாக வாகை சூடி மிக இளம் வயதில் இப்பட்டத்தை வென்று இருக்கும் குகேசுக்கு பாராட்டுகள். தங்களது இந்த சிறப்புமிகு சாதனை செஸ் விளையாட்டில் இந்தியாவின் வளமான மரபின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது. மேலும் மற்றொரு உலக சாம்பியனை உருவாக்கி செஸ் தலைநகரம் என்ற சிறப்பிடத்தை உலக அளவில் சென்னை தக்கவைத்து கொள்ளவும் அது துணை புரிந்துள்ளது. தமிழ்நாடு உங்களை எண்ணிப் பெருமை கொள்கிறது' என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உலக செஸ் சாம்பியன் குகேஷ் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "உங்கள் ஆதரவுக்கும் ஊக்கத்துக்கும் நன்றி சார்" என்று தெரிவித்துள்ளார்.


Next Story