6 இடங்களில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்: கேரள அதிகாரி தகவல்


6 இடங்களில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்: கேரள அதிகாரி தகவல்
x

மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்காக திருவனந்தபுரம் உதவி கலெக்டர் தலைமையில் 30 பேர் குழு நெல்லைக்கு வந்துள்ளனர்.

நெல்லை,

கேரளா மாநிலத்தில் இருந்து மருத்துவ கழிவுகளை மூட்டை மூட்டையாக லாரிகளில் கொண்டு வந்து நெல்லை அருகே நடுக்கல்லூர், கொண்டாநகரம், சுத்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் கொட்டிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சுத்தமல்லி போலீசாருக்கு புகார்கள் வந்தன. இந்த பிரச்சினை பூதாகரமாக வெடித்ததை தொடர்ந்து சுத்தமல்லி போலீசார் 6 வழக்குகளைபதிவு செய்துள்ளனர்.

ஏற்கனவே நெல்லையைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கழிவுகளை கொண்டு வந்து கொட்டிய லாரியின் உரிமையாளர் மற்றும் கேரளாவைச் சேர்ந்த தனியார் கழிவு மேலாண்மை நிறுவனத்தின் சூப்பர்வைசர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே பசுமை தீர்ப்பாயம், மருத்துவ கழிவுகளை கேரள மாநில அரசே அப்புறப்படுத்த உத்தரவிட்டது. இதையடுத்து கேரளா மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு நடத்தினர்.

இந்த சூழலில் நெல்லை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கொட்டப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகள் மீண்டும் கேரளாவுக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளன. கழிவுகளை அகற்றும் பணி தொடங்க உள்ளநிலையில், திருவனந்தபுரத்தில் இருந்து லாரிகள் வந்துள்ளது.

இதற்கிடையே கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை அகற்றுவதற்காக திருவனந்தபுரம் உதவி கலெக்டர் தலைமையில் 30 பேர் கொண்ட குழு கேரளாவில் இருந்து இன்று நெல்லை வந்துள்ளனர். அவர்கள் இங்கு தங்கியிருந்து மருத்துவ கழிவுகளை அகற்றுவார்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுடன், கேரள மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர். இதனிடையே 6 இடங்களில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்று கேரள அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.


Next Story