ரேஷன் கார்டு வைத்திருக்கும் தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் விளக்கம்


ரேஷன் கார்டு வைத்திருக்கும் தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் விளக்கம்
x

ரேஷன் கார்டு வைத்திருக்கும் தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்' தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலமாக, மாநிலம் முழுவதும் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அவர்களது வங்கிக் கணக்கில் ரூ.1,000 செலுத்தப்பட்டு வருகிறது.

சமீபத்தில் இந்த திட்டத்தில் புதிதாக 7 லட்சத்து 35 ஆயிரம் பயனாளிகள் இணைக்கப்பட்டனர். இதனிடையே, ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் 'எக்ஸ்' தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது;-

"கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு தங்களுடைய ரேஷன் கார்டு அடிப்படையில் விண்ணப்பித்துள்ள அனைவருடைய விண்ணப்பங்களையும் பரிசீலித்து, தகுதியுள்ளவர்களில் ஒருவர் கூட விடுபடாத அளவில் வழங்கிட வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசின் இலக்காகும்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆலோசனைகளைப் பெற்று, ரேஷன் கார்டு வைத்திருக்கும் தகுதியுள்ள அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என இன்று விருதுநகர் மாவட்ட நிகழ்ச்சியில் மக்களிடம் உறுதியளித்தேன்."

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


Next Story