ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க. போட்டியா..?
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி ஆலோசனை நடத்தி வருகிறது.
சென்னை,
2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட திருமகன் ஈ.வெ.ரா. வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வானார். அவர் உடல்நலன் பாதிக்கப்பட்ட நிலையில் காலமானார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் திருமகன் ஈ.வெ.ரா.வின் தந்தையும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டு வென்றார். அண்மையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார்.
இதனையடுத்து 4 ஆண்டுகளில் 2-வது முறையாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தொகுதியில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 8-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த சூழலில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வேட்பு மனுத் தாக்கல் கடந்த 1௦-ந் தேதி தொடங்கியது. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற ஜனவரி 20-ந் தேதி கடைசி நாள் ஆகும்.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் இந்த முறை தி.மு.க. போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. வேட்பாளராக வி.சி. சந்திரகுமார் போட்டியிடுகிறார். ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. போட்டியிடாமல் புறக்கணிப்பதாக அறிவித்தது. மேலும் அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான தே.மு.தி.க.வும் புறக்கணித்தது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் இத்தேர்தலில் போட்டியிடவில்லை. நாம் தமிழர் கட்சிக்கான வேட்பாளர் பொங்கலன்று அறிவிக்கப்படுவார் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக தமிழக பா.ஜ.க. ஆலோசனை நடத்தி வருகிறது. சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. அதில் மத்திய இணை மந்திரி எல்.முருகன், மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.