அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்காதது ஏன்? வன்னி அரசு விளக்கம்


அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்காதது ஏன்? வன்னி அரசு விளக்கம்
x

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவுக்கு வரவில்லை என்று திருமாவளவன் கூறவில்லை என வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

சென்னை,

எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தக வெளியீட்டு விழா நாளை சென்னையில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்று புத்தகத்தை வெளியிட்ட ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு முதல் பிரதியை பெற்றுக்கொள்கிறார். விஜய் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்க உள்ளதாக முதலில் தகவல் வெளியானது.

ஆனால், இந்த விழாவில் பங்கேற்கும் முடிவை திருமாவளவன் கைவிட்டார். கட்சி தொடங்கியுள்ள விஜய், திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். அதேவேளையில், தன்னுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரப்படும் என்றும் பேசியிருந்தார். இதனால், விஜய்யுடன் ஒரே மேடையை பகிர்ந்து கொண்டால் தேவையற்ற அரசியல் யூகங்களுக்கு வழி வகுக்கும் என்பதால் திருமாவளவன் இந்த விழாவை புறக்கணித்து இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்தது.

இந்த நிலையில், திருமாவளவன் புத்தக வெளியீட்டு விழாவை புறக்கணிப்பது ஏன்? என்பது குறித்து விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு விளக்கம் அளித்துள்ளார். வன்னி அரசு கூறியிருப்பதாவது:- அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவுக்கு வரமாட்டேன் என திருமாவளவன் கூறவில்லை. சமரச பாயாசம் கிண்டுகிறவரோடு மேடையை பகிர்ந்து கொள்ள முடியாது என்றே திருமாவளவன் கூறினார். நூல் வெளியீட்டாளர்களே திருமாவளவனை புறக்கணித்துவிட்டு பாயாசம்தான் வேண்டும் என சென்றுள்ளனர்.

திருமாவளவன் புறக்கணித்துவிட்டார் என்று பொய் பிரசாரத்தை ஊக்குவிக்கிறார்கள். திருமாவளவனை யாரும் பின்னிருந்து வழிநடத்த முடியாது. திமுக கொடுத்த நெருக்கடியால்தான் திருமாவளவன் பங்கேற்கவில்லை என உள்நோக்கம் கற்பிக்கப்படுகிறது. திருமாவளவனை இழுத்த இழுப்புக்கெல்லாம் கொண்டு செல்ல சில தரகர்கள் முயற்சிக்கின்றனர்" என்றார்.


Next Story