யார் அந்த சார்..? - நேர்மையான விசாரணை தேவை - திருமாவளவன் கோரிக்கை


யார் அந்த சார்..? - நேர்மையான விசாரணை தேவை - திருமாவளவன் கோரிக்கை
x

கோப்புப்படம்

பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபட்ட யாராக இருந்தாலும் கடும் தண்டனை தரப்பட வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) வெளியானது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சென்னை ஐகோர்ட்டு இந்த வழக்கைத் தாமாக முன்வந்து விசாரித்த நிலையில், மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரிக்க உத்தரவிட்டது. இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், "தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அவ்வப்போது நடந்துள்ள சூழலில், அவர்களுக்கான பாதுகாப்பை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என்பது வி.சி.க. வின் கோரிக்கை. இது குறித்து தமிழ்நாடு அரசுக்கு அவ்வப்போது நாங்கள் சுட்டிக்காட்டியிருக்கிறோம். வேண்டுகோள் வைத்துள்ளோம்.

அந்த வகையில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்துள்ள பாலியல் வல்லுறவு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி கைது செய்யப்பட்டிருந்தாலும்கூட, அந்த குற்றச்செயல் பெரும் வருத்தத்தையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது. கைது செய்யப்பட்ட நபருக்கு உடனடியாக பிணை வழங்கக் கூடாது. அவர் சிறையில் இருக்கும்போதே விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து தண்டனை கொடுக்க வேண்டும்.

பள்ளி மற்றும் கல்லூரி வளாக விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் தவிர்த்து வேறு சிலரும் ஈடுபட்டிருக்கலாம் என்ற வலுவான சந்தேகம் உள்ளது. அதனால், அரசும், காவல்துறையும் நேர்மையான முறையில் விசாரணை செய்து குற்றவாளி யாராக இருந்தாலும் கைது செய்ய வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.


Next Story