மக்களுக்காக உழைத்த கலைஞர் பெயரை வைக்காமல் வேறுயார் பெயரை வைக்க முடியும்?: உதயநிதி ஸ்டாலின் கேள்வி


மக்களுக்காக உழைத்த கலைஞர் பெயரை வைக்காமல் வேறுயார் பெயரை வைக்க முடியும்?: உதயநிதி ஸ்டாலின் கேள்வி
x

இன்னும் ஒரு ரெய்டு நடந்தால் அதிமுகவை எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் இணைத்து விடுவார் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

சென்னை ஆர்.கே.நகரில் திமுக சார்பில் நடைபெற்ற 'எளியோர் எழுச்சி நாள்' கொண்டாட்டத்தில் 48 இணையர்களுக்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்தார். மேலும் மணமக்களுக்கு ரூ.25 ஆயிரம் ரொக்கம் மற்றும் கட்டில், பீரோ உள்ளிட்ட 30 பொருள்கள் அடங்கிய சீர் வரிசையும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

எனக்கு 48 வயதாகிவிட்டது என்று சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியதில்லை; 48 வயதை சொல்லும் வகையில் 48 ஜோடிக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இல்லத்தில் 2 திருமணம் நடத்தி வைத்தேன், அப்படியென்றால் 50 வயது ஆகிவிட்டதா?.

திமுக ஆட்சியின் திட்டங்களை மக்கள் கொண்டாடுவதை பார்த்து எடப்பாடி பழனிசாமிக்கு கோவம், எரிச்சல் வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை மக்கள் வாழ்த்துகிறார்கள்; அது அவருக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமின்றி அரசின் திட்டங்களுக்கு கலைஞர் பெயரை வைப்பது பற்றி எடப்பாடி பழனிசாமி கேள்வி கேட்கிறார்.

தன்னுடைய 96 வயது வரை தமிழ்நாட்டுக்காக, தமிழ் மக்களுக்காக ஓயாது உழைத்த முத்தமிழறிஞர் கலைஞர் பெயரை சூட்டாமல் வேறுயார் பெயரை வைக்க முடியும். கூவத்தூரில் ஊர்ந்து போன கரப்பான் பூச்சியின் பெயரை வைக்கலாமா?. ஜெயலலிதா பெயரை வைத்தால் கூட எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ள மாட்டார். அவருக்கு மோடி அல்லது அமித்ஷா பெயரைதான் வைக்க வேண்டும்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்; ஆனால் சேலத்தில் ஐ.டி.ரெய்டு நடந்த அடுத்த நாளே கூட்டணி குறித்து தற்போது பேச முடியாது.. தேர்தல் நேரத்தில் பேசிக்கொள்ளலாம் என மாற்றி பேசியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. இன்னும் ஒரு ரெய்டு நடந்தால் அதிமுகவையே பாஜகவுடன் இணைத்து விடுவார். இதுதான் அதிமுகவின் நிலைமை.

2026 தேர்தல் மிக மிக முக்கியமான தேர்தல். அரசின் திட்டங்களை ஒவ்வொரு வீடாக சென்று மக்களிடம் எடுத்து கூற வேண்டும். இலக்கு 200 என்பதை மனதில் வைத்துக்கொண்டு ஒவ்வோரு வாக்களர்களையும் தேர்தலுக்கு முன்பாக 4 முதல் 5 முறை சந்தித்து பேசி அவர்களிடம் நமது திட்டங்களை பற்றி பேசவேண்டும். 7-வது முறையாக திமுகவை ஆட்சி கட்டிலில் அமர வைக்க அயராது உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story