அதிமுக மாணவர் அணி ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன?
அதிமுக மாணவர் அணியில் இளம் தலைமுறையினரை அதிக அளவில் சேர்த்து சாதனை படைத்திட சூளுரைக்கப்பட்டது.
சென்னை,
புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடுவது தொடர்பாகவும்; வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்களை சிறப்பாக நடத்துவது தொடர்பாகவும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில், அதிமுக மாணவர் அணிமாநில நிர்வாகிகள்; மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன்விவரம் பின்வருமாறு:-
வீரவணக்க நாள் கூட்டம்:-
தமிழ் நாட்டில் இந்தி திணிப்பை அடியோடு அழித்து, தாய் மொழியாம் தமிழ் மொழியை காத்திடும் நோக்கில், 1965-ம் ஆண்டு நடைபெற்ற மாபெரும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு, வீரமரணம் அடைந்த மொழிப்போர் தியாகிகளுக்கு ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 25-ம் தேதி அதிமுக சார்பில் வீர வணக்க நாள் அனுசரிக்கப்படும். "இந்தி திணிப்பை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" என்று வீர முழக்கமிட்டு, விஷம் அருந்தியும், தூக்கிட்டும், துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாகியும் உயிர் நீத்த தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் விதமாக, ஜனவரி, 25-ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கினங்க மாநிலம் முழுவதும் மாணவர் அணி சார்பாக வீர வணக்க நாள் கூட்டங்களை சிறப்பாக நடத்துவது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
2) புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆகியோரது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கழக மாணவர் அணி சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல்.
3) மக்களை மீளாத் துயரத்தில் ஆழ்த்தி வரும், ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக அரசை வீழ்த்தி, 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத்தேர்தலில், கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தலைமையில், தமிழகத்தில் மீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைப்பதற்கு அயராது உழைத்திட சபதமேற்போம்!
4) புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் துணைவியாரும், தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சருமான, வி.என்.ஜானகி அம்மையாருடைய நூற்றாண்டு விழாவை சீரும் சிறப்புமாக நடத்திக் காட்டிய கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றியும், பாராட்டும்!.
5) அதிமுக மாணவர் அணியில் இளம் தலைமுறையினரை அதிக அளவில் சேர்த்து சாதனை படைத்திட சூளுரை.
6) தமிழக பள்ளிக் கல்லூரி மாணவ, மாணவியர்களின் அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அதிமுக மாணவர் அணி பாதுகாப்பு அரணாக துணை நிற்றல்.
7) சமூக வலைதளங்கள் மூலமாக அதிக அளவில் மாணவ, மாணவியர்களையும், இளைஞர்களையும் கழகத்தில் உறுப்பினர்களாகச் சேர்த்திட சூளுரை.
8) சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவி ஒருவர் பல்கலைக் கழக வளாகத்திலேயே பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட நிகழ்வு தமிழ் நாடு மட்டுமல்லாமல், இந்தியா முழுவதையும் உலுக்கி தலைக்குனிவு ஏற்படுத்தி இருக்கிறது.
9) யார் அந்த சார்' முழக்கம் மூலம் அதிமுக மாணவர் அணி போராட்டம் களம் காணுதல்.
10) ஜனநாயகப் போராட்டத்திற்கு அனுமதி அளிக்காத முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை கண்டிக்கின்றோம்.
11) பள்ளி, கல்லூரி வளாகத்தில் போதைப் பொருட்கள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தாத முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை கண்டிக்கின்றோம். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.