உதயநிதி என்ன சாதனை செய்தார்? அவருக்கு ஏன் துணை முதல்-அமைச்சர் பதவி? - எடப்பாடி பழனிசாமி


உதயநிதி என்ன சாதனை செய்தார்? அவருக்கு ஏன் துணை முதல்-அமைச்சர் பதவி? - எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 3 Nov 2024 12:48 PM IST (Updated: 3 Nov 2024 4:27 PM IST)
t-max-icont-min-icon

2026ல் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம்,

வருகிற 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வலுவான கூட்டணியுடன் களம் இறங்க அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது. ஆனால், ஓரளவு வாக்கு வங்கியை வைத்திருக்கும் கட்சிகள் எல்லாம் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. அ.தி.மு.க. எதிர்பார்க்கும் கூட்டணி அமைய வேண்டுமெனில், தி.மு.க. கூட்டணியில் மாற்றம் ஏற்பட வேண்டும். அது சாத்தியமாகுமா? என்ற நிலை உள்ளது.

இந்த நிலையில், அரசியல் களத்துக்கு புதிதாய் வந்துள்ள நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை நோக்கி காய்களை நகர்த்திவரும் நடிகர் விஜய், சமீபத்தில் தனது கட்சியின் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வெற்றிகரமாக நடத்தினார். அந்த மாநாட்டில் திரண்ட தொண்டர்களின் கூட்டம் மற்ற கட்சிகளை சற்று ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதே நேரத்தில், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வே விஜய் கட்சியுடன் கூட்டணி அமைத்தால் என்ன? என்று யோசித்து வருகிறது. வலுவான கூட்டணியுடன் களம் இறங்கும் தி.மு.க.வை வீழ்த்த இதுபோன்ற கட்சியுடன் கூட்டணி அமைப்பது அவசியம் என்று அ.தி.மு.க. கருதுகிறது.

இந்த நிலையில், வரும் 6-ந்தேதி (புதன்கிழமை) சென்னையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்தில், சட்டசபை தேர்தலை வலுவாக எதிர்கொள்ளும் வகையில் கூட்டணி அமைப்பது குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. அதற்காக சில திட்டங்களை வியூகங்களாக வகுத்து வருகிறது.

இதனிடையே அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் மாநில நிர்வாகிகளுக்கும், செய்தி தொடர்பாளர்களுக்கும் வாய்மொழி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, பா.ஜனதா, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி ஆகிய 4 கட்சிகளை விமர்சித்து கருத்து தெரிவிக்க கூடாது என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் தி.மு.க.வில் உழைப்பவர்களுக்கு மரியாதை கிடையாது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சேலத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "தி.மு.க.விற்காக 20 ஆண்டுகள் ஸ்டாலின் உழைத்தார் என்பதை மறுக்க முடியாது.. ஆனால் உதயநிதி என்ன சாதனை செய்தார்? அவருக்கு ஏன் துணை முதல்-அமைச்சர் பதவி? உதயநிதி மட்டும்தான் கட்சிக்காக உழைத்தாரா? மற்றவர்கள் யாரும் உழைக்கவில்லையா?

கருணாநிதி குடும்பம் என்ற அடையாளத்தில் மட்டுமே துணை முதல்-அமைச்சரானார் உதயநிதி. தி.மு.க.வில் உழைப்பவர்களுக்கு மரியாதை கிடையாது. குடும்ப கட்சியாக தி.மு.க. மாறி விட்டது. தமிழகத்தில் மன்னராட்சி ஒருபோதும் எடுபடாது. 2026 சட்டமன்றத் தேர்தல் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக அமையும். எந்த ஆட்சி சிறந்தது என்று எடைபோட்டு மக்கள் வாக்களிப்பார்கள்.

அ.தி.மு.க. குறித்து விஜய் பேசாதது குறித்து மற்றவர்கள் ஆதங்கப்பட தேவையில்லை. மக்களுக்காக பணியாற்றிய அ.தி.மு.க.வை விஜய்யால் எப்படி விமர்சிக்க முடியும்.

கேரளாவில் ரெயில் மோதி இறந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். நிவாரணத் தொகை உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும். வருங்காலங்களில் இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.


Next Story