சட்டசபையில் காரசார விவாதம்: டங்ஸ்டன் திட்டத்தை தடுத்தே தீருவோம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தி.மு.க. அரசு மக்களின் எந்த பிரச்சனையிலும் அலட்சியமாக இருக்கவில்லை என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு சட்டசபை கூட்டம் கூட்டம் இன்று தொடங்கியது: முதலாவதாக முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அடுத்ததாக கேள்வி நேரம் தொடங்குகிறது. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
பின்னர், அரசினர் தனித் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டது. அதன்படி மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்திடவும், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக்கூடாது என்றும் மத்திய அரசை வலியுறுத்தி தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இதன்படி மாநில அரசுகளின் அனுமதியின்றி எந்த சுரங்க அனுமதியையும் வழங்கக்கூடாது என்றும், சுரங்கத்திற்கு தேர்வான பகுதி ஏற்கனவே பல்லுயிர் பெருக்கத் தலமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படுவதாக சட்டசபையில் தீர்மானத்தினை நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் முன் மொழிந்தார்.
மேலும் சுரங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசும், மக்களும் ஏற்க மாட்டார்கள் என்றும் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் துரை முருகன் தெரிவித்தார்.
இந்நிலையில் சட்டமன்றத்தில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிரான தனித் தீர்மானம் மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். அவர் கேட்ட கேள்விக்கு அவை முன்னவர் துரை முருகன் பதிலளித்து பேசினார். இதனால் சட்டசபையில் காரசார விவாதம் நடைபெற்றது.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி:
மக்கள் போராட்டத்திற்கு பின் வேறு வழியின்றி பிரதமருக்கு முதல்-அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். ஆரம்பக் காலத்திலேயே ஒப்பந்தபுள்ளி கோரும் போதே, இந்த விவரத்தை மத்திய அரசுக்கு தெரிவித்து இருந்தால், ஏலத்தை தடுத்து இருக்கலாம். மாநிலத்தின் உரிமை பறிபோகும் போது நமது உறுப்பினர்கள் அவையை ஒத்திவைக்கும் அளவிற்கு அழுத்தம் தந்திருக்க வேண்டும்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் :
தி.மு.க. உறுப்பினர்கள் அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். நாடாளுமன்றத்தில் கனிமவள மசோதா நிறைவேறும் போது, தி.மு.க. எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் தவறான தகவலை அவையில் பதிவு செய்யக் கூடாது. எங்களின் ஆதரவுடன் அந்த சட்டம் நிறைவேறவில்லை என்பதை அவர் தெரிந்துகொள்ள வேண்டும்.
திமுக அரசு மக்களின் எந்த பிரச்சனையிலும் அலட்சியமாக இருக்கவில்லை. இந்த அரசை பொருத்தவரையில் அரிட்டாபட்டி சுரங்கத்திற்கு அனுமதி வழங்க மாட்டோம். உறுதியாக சொல்கிறேன். நான் முதல்-அமைச்சராக இருக்கிறவரை நிச்சயமாக மத்திய அரசு இந்தத் திட்டத்தை கொண்டுவர முடியாது. அது வந்தாலும் தடுத்தே தீருவோம்.
பின்னர் மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிராக சட்டசபையில் கொண்டுவரப்பட்ட தனித்தீர்மானம், பரபரப்பான விவாதங்களுக்குப் பிறகு அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.