விஸ்வகர்மா திட்டம்: முதல்-அமைச்சரின் முடிவு கண்டிக்கத்தக்கது - தமிழிசை சவுந்தரராஜன்
திட்டத்தை செயல்படுத்த முடியாது என மத்திய அரசிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம், சாதி அடிப்படையிலான தொழில் முறையை வலுப்படுத்தும் எனவும், இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாது என்றும் மத்திய அரசிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த முடிவுக்கு பாஜகவை சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;
"விஸ்வகர்மா திட்டத்தை செயல்படுத்தாத முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் முடிவு கண்டிக்கத்தக்கது. பாரம்பரிய கைவினைஞர்களுக்கு பயனளிக்கும் வகையில் இந்த திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகம் செய்தார். பெரும்பாலான மாநிலங்கள் இந்த திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கியுள்ளன. மேலும் கைவினைஞர்கள் பிரதமருக்கு நன்றி தெரிவித்தனர். ஆனால் அரசியல் காரணங்களுக்காக கைவினைஞர் தலைமுறைக்கு திமுக அரசு அநீதி செய்கிறது."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.