விருதுநகர்: ரெயில் முன் பாய்ந்து 2 பெண்கள் தற்கொலை

விருதுநகரில் வெவ்வேறு சம்பவங்களில் ரெயில் முன் பாய்ந்து 2 பெண்கள் தற்கொலை செய்துகொண்டனர்.
விருதுநகர்,
சிவகாசி அருகே திருத்தங்கல் சுப்பிரமணியர் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி. இவருடைய மனைவி பேச்சியம்மாள். கருப்பசாமியும், மகனும் இறந்த நிலையில் பேச்சியம்மாள் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் ஆலமரத்துப்பட்டி ரெயில்வே கேட் அருகே மயிலாடுதுறை-செங்கோட்டை விரைவு ரெயில் முன்பு பாய்ந்து பேச்சியம்மாள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை வரை செல்லும் விரைவு ரெயில் சாத்தூர் ரெயில் நிலையத்தை கடக்கும்போது 55 வயது மதிக்கத்தக்க பெண் ரெயில் முன் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த ரெயில்வே போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் சாத்தூர் குருலிங்கபுரத்தை சேர்ந்த சுந்தரி (56) என்பது தெரியவந்தது. இதையடுத்து சுந்தரியின் உடலை சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.