விழுப்புரம்: கனமழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை எடப்பாடி பழனிசாமி ஆய்வு


விழுப்புரம்: கனமழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை எடப்பாடி பழனிசாமி ஆய்வு
x
தினத்தந்தி 1 Dec 2024 7:46 PM IST (Updated: 1 Dec 2024 7:56 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார்.

விழுப்புரம்,

வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே நேற்று கரையை கடந்தது. புயல் கரையை கடந்த நிலையிலும், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பெரும்பாலான தெருக்கள், சாலைகள் மற்றும் குடியிருப்புகள், விளை நிலங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. புயல் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்ய தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் பாதிராபுலியூர் பகுதியில் கனமழையால் வெள்ளம் சூழ்ந்துள்ள விளை நிலங்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது புயலால் வேளாண் பயிர்கள் பாதிக்கப்பட்டது குறித்து விவசாயிகளிடம் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார்.

அதனை தொடர்ந்து நாகலாபுரம் பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். பின்னர் அங்குள்ள மக்களை சந்தித்து அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி ஆறுதல் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Next Story