கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு: தவெக தலைவர் விஜய்
ஊழலில் மலிந்து முகமூடியை அணிந்து கொண்டு நம்மை ஆள்பவர்களே நமது எதிரி; மதவெறி பிடித்தவர்களும் ஊழல்வாதிகளும் நமது எதிரிகள் என்று விஜய் கூறினார்.
விழுப்புரம்
Live Updates
- 27 Oct 2024 12:13 PM IST
தவெக மாநாட்டு திடலிலேயே அமர்ந்து மது அருந்தும் தொண்டர்கள்
தவெக மாநாட்டு திடலிலேயே தொண்டர்கள் அமர்ந்து மது அருந்தும் காட்சி வைரலாகி வருகிறது.
- 27 Oct 2024 12:04 PM IST
சுட்டெரிக்கும் வெயில் - குடையாக மாறிய நாற்காலி
தவெக மாநாட்டு திடலில் சேர்களை தலையில் தூக்கிக் கொண்டு அங்கும் இங்கும் தொண்டர்கள் சுற்றி வருகின்றனர். மாநாட்டு திடலில் போடப்பட்டிருந்த 50,000 இருக்கைகளும் நிரம்பின. மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்கும் நிலையில், தற்போதே நிரம்பி வழிகிறது. வெயிலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தலையில் சேர்களை தூக்கி நிற்கும் தொண்டர்களை பார்க்க பரிதாபமாக இருந்தது.
- 27 Oct 2024 11:58 AM IST
ஒருங்கிணைப்பு குழு மீது விஜய் காட்டம்
மாநாட்டு திடலில் கடும் வெயிலால், சேர்களை குடையாக பிடித்தப்படி தலையில் தூக்கி வைத்து தரையில் தொண்டர்கள் அமர்ந்திருந்தனர். நீர்சத்து குறைபாட்டால் பெண்கள் பலர் மயக்கம் அடைந்த நிலையில் விஜய் நிர்வாகிகளை அழைத்து கண்டித்ததாக கூறப்படுகிறது. மாநாட்டிற்கு சரியாக தண்ணீர் விநியோகம் செய்ய முடியவில்லையா? சரியாக திட்டமிடவில்லையா? ஏன் இந்த சொதப்பல்? என நிகழ்ச்சி ஒருங்கிணைபாளரிடம் விஜய் கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் விஜய் நடந்து வருவதற்காக அமைக்கப்பட்டுள்ள பாதையில் இருந்து தண்ணீர் பாட்டில்களை தொண்டர்கள் நோக்கி வீசிய நிர்வாகிகளை விஜய் கண்டித்தாக கூறப்படுகிறது.
- 27 Oct 2024 11:50 AM IST
த.வெ.க முதல் மாநில மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் வெளியானது
2 மணிக்கு மேல் கலை நிகழ்ச்சி தொடங்குகிறது. 4 மணி முதல் 4.30 மணிக்குள் கொடி ஏற்றும் விஜய், 6 மணிக்கு விழா மேடையில் சிறப்புரை ஆற்றுகிறார் என்று நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.
- 27 Oct 2024 11:39 AM IST
தவெக மாநாட்டிற்கு விசிக வாழ்த்து
சகோதரர் விஜய்யின் மாநாடு வெற்றிபெற வாழ்த்துகள். தலைவர்களின் கட்-அவுட்டுகளை வைத்து உறுதியான லட்சிய அரசியலை வெளிச்சம்போட்டு காட்டியுள்ளார். தனது பயணத்தில் விஜய் கொள்கை ரீதியான அரசியலில் முக்கிய பங்காற்ற வேண்டும் என்று விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.
- 27 Oct 2024 11:34 AM IST
தவெக மாநாட்டில் 20க்கும் மேற்பட்டோர் மயக்கம்
கடும் வெயிலால் தவெக மாநாட்டு திடலில் 20க்கும் மேற்பட்டோர் ஆங்காங்கே மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மயக்கமடைந்த நபர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- 27 Oct 2024 11:24 AM IST
நாகையில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு: 150 வாகனங்களில் புறப்பட்ட தொண்டர்கள்
தவெக மாநாட்டில் பங்கேற்க நாகையில் இருந்து 150 வாகனங்களில் தொண்டர்கள் புறப்பட்டுள்ளனர். இதனால் நாகை புதிய பேருந்து நிலையம் முதல் நாகூர் வரை போக்குவரத்து ஸ்தம்பித்தது. நாகை-நாகூர் சாலையில் தொண்டர்கள் ஆரவாரத்துடன் அணிவகுத்துச் சென்ற வாகனங்களால் பரபரப்பு ஏற்பட்டது.
- 27 Oct 2024 11:13 AM IST
தவெக மாநாடு - குடிநீரின்றி தொண்டர்கள் அவதி
தவெக மாநாட்டுக்கு அதிகாலை முதலே தொண்டர்கள் குவிந்து வரும் சூழலில் குடிநீர் கிடைக்காமல் தொண்டர்கள் அவதி அடைந்துள்ளனர். குடிநீரின்றி மயக்கமடைந்த நபர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாநாட்டு உள்பகுதியில் திரள்வதால் கட்டுப்படுத்த முடியாமல் பவுன்சர்கள் திணறி வருகின்றனர். மாநாட்டு திடலில் இரு புறங்களிலும் தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது. தொண்டர்கள் அமைதி காக்கும்படி தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தி உள்ளார்.
- 27 Oct 2024 10:42 AM IST
டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டாம் - டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு
தவெக மாநாட்டுக்கு வரும் தொண்டர்களின் பாதுகாப்பு கருதி விழுப்புரம், விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டாம் என்று டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
- 27 Oct 2024 10:27 AM IST
பவுன்சர்கள் - தொண்டர்கள் இடையே வாக்குவாதம்
தவெக மாநாட்டில்.அனுமதிக்கப்பட்ட இடத்தை தவிர வேறு பகுதிகளில் அமர்ந்துள்ள தொண்டர்களை பவுன்சர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகின்றனர். இதனால் பவுன்சர்கள் - தொண்டர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.