த.வெ.க.வில் மாவட்ட செயலாளர்களை நியமித்து விஜய் உத்தரவு

முதற்கட்டமாக 19 மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை,
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை கடந்த ஆண்டு தொடங்கினார். இதையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அக். 27ம் தேதி பிரமாண்டமாக நடந்தது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். மாநாட்டில் விஜய்யின் பரபரப்பான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
மாநாட்டை தொடர்ந்து 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் தயாராகி வருகிறது. இதற்காக, நிர்வாகிகள் நியமனம் தொடர்பான வேலைகள் த.வெ.க.வில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் 120 மாவட்ட செயலாளர்களை அறிவித்து அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார். நிர்வாக வசதிக்காக தவெக 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு மாவட்டத்திற்கு மாவட்ட செயலாளர், இணை செயலாளர், பொருளாளர் என 15 பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக 19 மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தவெகவில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு தனது உருவம் பொறித்த வெள்ளி நாணயத்தை விஜய் பரிசாக வழங்கியுள்ளார்.த.வெ.க. கட்சிக்கு மாவட்ட அளவிலான நிர்வாகிகளை தேர்வு செய்ய கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் இன்று நேர்காணல் நடைபெற்ற நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.