'எம்புரான்' படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்க வேண்டும் - வேல்முருகன் வலியுறுத்தல்


எம்புரான் படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்க வேண்டும் - வேல்முருகன் வலியுறுத்தல்
x

‘எம்புரான்' படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்க வேண்டும் என வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

"பிரபல நடிகர் மோகன்லால் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'எம்புரான்' படத்தில், முல்லைப் பெரியாறு அணை குறித்து அவதூறான கருத்து தெரிவிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம் பெற்றிருக்கிறது. படத்திற்கும், அதன் போக்கிற்கும் தொடர்பே இல்லாமல், முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக வன்மத்தை காட்டியிருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது.

இரண்டு ஷட்டரை திறந்தாலே, மக்களை பலிவாங்குற அணையை அதாவது முல்லைப் பெரியாறு அணையை குண்டு வைத்து தகர்த்தால், கேரளா மறுபடியும் தண்ணீருக்குள் மூழ்கும். அணையை காப்பாற்ற செக் டேம் எனும் சுவர்களால் பயனில்லை, அணையே இல்லாமல் இருந்தால் தான் சரி என்பன போன்ற வசனங்களும் படத்தில் இடம்பெறுகின்றன. தமிழின வெறுப்பை உமிழும் இதுபோன்ற திரைப்படங்கள், தமிழ்நாடு - கேரள மாநில மக்களிடையே நீடித்து வரும் நல்லுறவை சீர்குழைத்து, இருமாநில உறவை கெடுக்கும்.

எனவே, 'எம்புரான்' படத்தில் முல்லைப் பெரியாறு அணை குறித்து அவதூறான கருத்து தெரிவிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்க வேண்டும். தொடர்ந்து அறிவார்ந்த தமிழ்ச் சமூகத்தை கொச்சைப்படுத்தி வரும் போக்கை மலையாள திரையுலகம் கைவிட வேண்டும்."

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story