இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்கும் வி.நாராயணன், சாமிதோப்பு கோவிலில் சாமி தரிசனம்
சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
புதுடெல்லி,
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவராக தற்போது சோம்நாத் உள்ளார். இவரது பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், இஸ்ரோவின் புதிய தலைவராக வி. நாராயணனை மத்திய அரசின் நியமனக்குழு நியமனம் செய்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட வி.நாராயணன், திருவனந்தபுரத்தில் வலியமலாவில் உள்ள எல்.பி.,எஸ்.சியின் இயக்குனராக பணியற்றியுள்ளார். இஸ்ரோவின் தலைவராக வி.நாராயணன் நாளை மறுநாள் பொறுப்பேற்க உள்ளார்.
இஸ்ரோவின் தலைவராக நாளை மறுநாள் பொறுப்பேற்க உள்ள வி.நாராயணன், தனது சொந்த மாவட்டமான கன்னியாகுமரியில் உள்ள சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதி கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
சாமி தரிசனம் செய்த பின்னர், இஸ்ரோ தலைவர் பதவி குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "இந்திய விண்வெளித் துறையை வழிநடத்தும் பொறுப்பு என் மீதான நம்பிக்கையால் பிரதமர் மோடி கொடுத்து உள்ளார். இறைவனின் அருளாலும், பெரியவர்களின் ஆசியாலும் இந்த பதவி கிடைத்துள்ளது. இந்த பொறுப்பை இந்திய விண்வெளி துறையினரின் கூட்டு முயற்சியின் மூலம் சிறப்பாக மேற்கொள்வேன். பொறுப்பினை ஏற்ற பின்னர், இஸ்ரோவின் அடுத்த செயல்பாடுகள் குறித்து உங்களிடம் தெரிவிப்பேன்."
இவ்வாறு அவர் கூறினார்.