மின்வாரியத்தில் பணியின்போது இறந்த 311 பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை: உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
மின்வாரியத்தில் பணியின்போது இறந்த 311 பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணைகளை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (9.1.2025) வழங்கினார்.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;-
தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (9.1.2025) சென்னை தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றி, பணிக்காலத்தின்போது உயிரிழந்த 311 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு பதவியேற்ற 7.5.2021 முதல் இதுவரை தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பல்வேறு பதவிகளுக்கான 2,420 பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இன்று வழங்கப்படும் 311 பணி நியமன ஆணைகளை சேர்த்து மொத்தம் 2,731 பணியிடங்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அகில இந்திய அளவில் தமிழ்நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களில் முதல் முறையாக தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியதாரர்கள் பயன்பெறும் வகையில் புதிய கைபேசி செயலி புதுமையான அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயலி வாயிலாக, மின்வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் /குடும்ப ஓய்வூதியதாரர்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தவாறே தங்களுக்கு தேவையான தகவல்களை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
இச்செயலி மூலம் ஓய்வூதியதாரர்கள்/குடும்ப ஓய்வூதியதாரர்கள்/ கருணை ஓய்வூதியதாரர்கள் தங்களது மருத்துவ காப்பீட்டு அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாதாந்திர ஓய்வூதிய விவரம், வருடாந்திர ஓய்வூதிய அட்டவணை, வருமான வரி செலுத்துபவர்களுக்கான படிவம் 16 பதிவிறக்கம் மற்றும் அனைத்து பயனுள்ள தகவல்களும் இச்செயலியில் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் பெற ஆதார் எண்ணை (e-KYC) வாயிலாக இச்செயலி மூலம் எளிதாக பதிவு செய்யலாம்.
இந்த செயலி மூலம், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் சுமார் ஒரு இலட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் மின்சார வாரிய ஓய்வூதியதாரர்கள் எளிதில் பயன்பெறும் வகையிலான இந்த புதிய செயலியினை அறிமுகப்படுத்தி, மூன்று ஓய்வூதியதாரர்களுக்கு வாழ்நாள் சான்றிதழ்களை வழங்கினார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.