தமிழ்நாட்டில் கொடுங்கோலாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - ஓ.பன்னீர்செல்வம்


தமிழ்நாட்டில் கொடுங்கோலாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - ஓ.பன்னீர்செல்வம்
x

கோப்புப்படம் 

மாநில சுயாட்சியை தாரைவார்க்கும் அரசாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாட்டை விடியலை நோக்கி அழைத்துச் சொல்கிறோம் என்றுகூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க., தமிழ்நாட்டை அழிவுப் பாதைக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது. கடந்த 42 மாத காலம் தமிழ்நாட்டின் இருண்ட காலம் என்று சொல்லும் அளவுக்கு ஒரு மோசமான ஆட்சியாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது.

ஒரு நாடு வளர்ச்சிப் பாதையில் செல்கிறது என்றால், அந்த நாட்டில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும், மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டு இளைஞர்கள் அறிவுத் திறன் உயர்த்தப்பட வேண்டும், அரசுப் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட வேண்டும், விலைவாசி கட்டுப்படுத்தப்பட வேண்டும். ஆனால், இவையெல்லாம் கடந்த 42 மாத கால தி.மு.க. ஆட்சியில் நடைபெறவில்லை. மாறாக, போதைப் பொருட்களின் புகலிடமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது.

தனியார் வேலைவாய்ப்புகளைப் பொறுத்த வரையில், புதிதாக தொழில்கள் துவங்கப்பட வேண்டும் அல்லது இருக்கின்ற தொழில்கள் விரிவுபடுத்தப்பட வேண்டும். தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து, போதைப் பொருட்களின் நடமாட்டம் கொடிகட்டி பறக்கின்ற நிலையில், தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தனியார் நிறுவனங்கள் தயக்கம் காட்டுகின்றன. உத்தரபிரதேசம், குஜராத், கர்நாடகா, மராட்டியம் போன்ற மாநிலங்களில் மிகப் பெரிய அளவில் தொழில் முதலீடுகள் ஈர்க்கப்படுகின்ற நிலையில், தமிழ்நாட்டில் தொழில் முதலீடு என்பது சொற்ப அளவிலேயே உள்ளது. பெரும்பாலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் காகித நிலையிலேயே உள்ளன.

உயர் கல்வியை எடுத்துக் கொண்டால், கடந்த 42 மாத காலத்தில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட திறக்கப்படவில்லை. 42 மாதங்களுக்குப் பிறகு, இப்போதுதான் ஆறு மருத்துவக் கல்லூரிகள் துவங்க மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்து இருக்கிறார். இதுதான் தி.மு.க. ஆட்சியின் லட்சணம்! இதேபோன்று பொறியியல் கல்லூரியும் ஆரம்பிக்கப்படவில்லை. சட்டக் கல்லூரி துவங்க பணம் இல்லை என்கிறார் சட்ட அமைச்சர். அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களைப் பொறுத்த வரை மூன்றரை லட்சம் காலிப் பணியிடங்களில் முப்பத்தைந்தாயிரம் காலிப் பணியிடங்களை மட்டுமே தி.மு.க. அரசு கடந்த 42 மாதங்களில் நிரப்பியுள்ளது.

ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அனைத்து வரிகளை உயர்த்தியும், மக்கள்மீது கூடுதல் நிதிச் சுமையை திணித்தும், நிதி இல்லை என்று சொல்லக்கூடிய திறமையற்ற அரசாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது. மாநில உரிமைகள் எல்லாம் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. மாநில சுயாட்சியை தாரைவார்க்கும் அரசாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது.

மக்கள் நலன்களைப் பொறுத்தவரையில், தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டுவதைப் பொறுத்தவரையில், மத்திய அரசிடம் இணக்கமாக இருந்து தமிழ்நாட்டின் தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கும் அரசுதான் நிர்வாகத் திறமையுள்ள அரசு. மக்கள் நலனில் மத்திய அரசிடம் மோதல் போக்கை கடைபிடிக்கும் தி.மு.க. அரசு, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் மு. கருணாநிதியின் நூற்றாண்டு விழாவிற்கு மத்திய மந்திரியை வரவழைத்து நாணயம் வெளியிடுகிறது. மக்கள் நலம் என்று சொல்லிக் கொண்டு தன் மக்கள் நலத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிற அரசாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது.

மொத்தத்தில் தமிழ்நாட்டில் ஒரு கொடுங்கோலாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் இருண்ட கால ஆட்சியை பொற்கால ஆட்சியாக மாற்ற முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் நின்று அடுத்தத் தேர்தலில் ஜனநாயகத்தின்மூலம் தமிழ்நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story