'த.வெ.க.வும், வி.சி.க.வும் எதிரெதிர் துருவங்கள் இல்லை' - ஆதவ் அர்ஜுனா பேட்டி

த.வெ.க.வும், வி.சி.க.வும் எதிரெதிர் துருவங்கள் இல்லை என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
சென்னை,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளராக செயல்பட்டு வந்தவர் ஆதவ் அர்ஜுனா. கட்சி விரோத செயலில் ஈடுபட்டதாக கூறி ஆதவ் அர்ஜுனாவை 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்வதாக வி.சி.க. தலைவர் திருமாவளவன் கடந்த மாதம் அறிவித்தார். இதையடுத்து, வி.சி.க.வில் இருந்து விலகுவதாக ஆதவ் அர்ஜுனா அறிவித்தார்.
இந்நிலையில், ஆதவ் அர்ஜுனா இன்று பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்திற்கு வந்தார். அதேபோல, அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப்பிரிவு இணைச்செயலாளராக இருந்த நிர்மல் குமாரும் பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்திற்கு வந்தார். த.வெ.க. அலுவலகத்திற்கு வந்த இருவரும் தங்களை அக்கட்சியில் இணைத்துக்கொண்டனர்.
த.வெ.க.வில் இணைந்த ஆதவ் அர்ஜுனாவிற்கு தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. த.வெ.க.வின் அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியுடன் இணைந்து ஆதவ் அர்ஜுனா செயல்படுவார் என த.வெ.க. தலைவர் விஜய் அறிவித்துள்ளார். அதேபோல், த.வெ.க.வின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு துணை பொதுச்செயாளராக நிர்மல் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், த.வெ.க.வில் இணைந்த ஆதவ் அர்ஜுனா, வி.சி.க. தலைவர் திருமாவளவனை அசோக்நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற புத்தகத்தை திருமாவளவனிடம் ஆதவ் அர்ஜுனா வழங்கினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆதவ் அர்ஜுனா, "கொள்கை ரீதியாக திருமாவளவனிடம் இருந்து மிகப்பெரிய கருத்துகளை உள்வாங்கி கள அரசியலை கற்றுக்கொண்டேன். எனது ஆசானாக இருக்கக் கூடிய திருமாவளவனிடம் ஆசி பெற்று எனது பயணத்தை தொடங்குவேன் என்று மக்களிடம் கூறியிருந்தேன்.
அதன்படி திருமாவளவனிடம் வாழ்த்து பெறவும், ஆசி பெறவும் இங்கு வந்தேன். அவர் நிறைய அறிவுரைகளை வழங்கியிருக்கிறார். அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதிகாரத்தை அடைவதற்கான பயணத்தில், கொள்கைப்படி அரசியலை உருவாக்க வேண்டும் என்பதே எப்போதும் அவரது அறிவுரையாக இருக்கும்.
அவர் சொன்னபடி பெரியார் மற்றும் அம்பேத்கரின் கொள்கைப்படி எனது பயணம் இருக்கும். த.வெ.க.வும், வி.சி.க.வும் எதிரெதிர் துருவங்கள் இல்லை. நாங்கள் ஒரே துருவத்தில், ஒரே கருத்தில்தான் இருக்கிறோம். கொள்கை அடிப்படையில் நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம்."
இவ்வாறு ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.