தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு 4 ஆண்டுகள் மட்டுமே பதவி
நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் வினியோகம் தொடங்கியது
சென்னை,
தமிழக வெற்றிக்கு கழக கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கவில்லை. பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் நிர்வாகிகள் தேர்வு குறித்து ஆலோசனை நடைபெற்றது.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர், இணை செயலாளர், துணை செயலாளர், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் வினியோகம் தொடங்கியது. ஏராளமானோர் விண்ணப்ப படிவத்தை பெற்று சென்றனர். கட்சியில் பொறுப்புகளை பெற விரும்புவோர், விண்ணப்ப படிவத்தை பெற்று அதனை பூர்த்தி செய்து கட்சி தலைமையிடம் சமர்பிக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
விண்ணப்ப படிவத்துடன் தேர்தல் நெறிமுறைகளும் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் நிர்வாகிகளின் பதவிக்காலம் 4 ஆண்டுகள் மட்டுமே. கட்சியின் தேர்தல் குழுவின் முடிவே இறுதியானது. தேர்தலில் தேர்வு செய்யப்பட்டவர்கள், தலைமைக்கழகத்தால் முறைப்படி அறிவிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.