அறப் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கும் தி.மு.க. அரசிற்கு கடும் கண்டனம்-ஓ.பன்னீர்செல்வம்


அறப் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கும் தி.மு.க. அரசிற்கு கடும் கண்டனம்-ஓ.பன்னீர்செல்வம்
x

அறப் போராட்டங்களை அடக்கி ஒடுக்கும் நடவடிக்கைகளை தி.மு.க. அரசு எடுத்து வருகிறது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

"அதிகாரம், கள்ளினும் காமத்தினும் போதை மிக்கது. அதிக அதிகாரம் அளவு கடந்த போதையைத் தரும். அதிகாரத்தைக் கையாண்டு ஒரு முறை அனுபவப்பட்டு விட்டவர்கள், வெகு சுலபத்தில் அதனை கைவிடத் துணியார். என்றும் தன்னிடத்திலேயே அதிகாரம் சிரஞ்சீவியாக நிலைத்திருக்கப் பார்த்துக் கொள்வதில் மிக்க கவலை எடுத்துக் கொள்வர். மக்களாட்சி முறைக்கு இது முற்றிலும் புறம்பானது" என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள். பேரறிஞர் அண்ணா வழியில் ஆட்சித் நடத்திக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு, அவருடைய கருத்துகளுக்கு முரணான வழியில், மக்களாட்சிக்கு புறம்பாக தி.மு.க. அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், மாணவி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகள் அறப் போரட்டங்களை நடத்தி வருகின்றன.

அந்த வகையில், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி சார்பில் மதுரையில் இருந்து சென்னைக்கு நீதி கேட்டு பேரணி மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நடிகை குஷ்பு, மாநில மகளிர் அணித் தலைவி திருமதி உமாரதி மற்றும் நிர்வாகிகள் மதுரை, சிம்மக்கல், செல்லத்தம்மன் கோவில் அருகே பேரணி செல்ல திரண்டபோது, அவர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது. இது ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயல். அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பாலியல் துன்புறுத்தலில், துணை முதல்-அமைச்சர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஆகியோருடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட, தி.மு.க.வைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்ற நிலையில், அதுகுறித்து முதல்-அமைச்சர் மவுனம் சாதிப்பதும், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சென்று அங்கு பயிலும் மாணவிகளுக்கு ஆறுதல் கூறாததும், குற்றவாளிக்கு ஆதரவாக தி.மு.க. அரசு செயல்படுகிறதோ, குற்றவாளியின் பின்னணியில் உள்ளவர்களை மூடி மறைக்கப் பார்க்கிறதோ என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்தும் வகையில், அறப் போராட்டங்களை அடக்கி ஒடுக்கும் நடவடிக்கைகளை தி.மு.க. அரசு எடுத்து வருகிறது. ஆளும் கட்சியில் வளரும் சர்வாதிகாரத்தை கண்டிப்பது, உரிமையையும், உடமையையும் பறிக்கும் நோக்கில் ஆளும் கட்சி நடந்து கொள்ளும்போது அதனைக் கண்டிப்பது. எதிர்த்து கிளர்ச்சி நடத்துவது ஆகியவை எதிர்க்கட்சிகளுக்கான லட்சணங்கள் என்று பேரறிஞர் அண்ணா அவர்களே கூறியிருக்கிறார். இதைத் தான் தற்போது பாரதிய ஜனதா கட்சி செய்து கொண்டிருக்கிறது. இதைத் தான் பிற அரசியல் கட்சிகளும் மேற்கொள்கின்றன. இந்த அறப்போராட்டத்தை தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி அடக்க நினைக்கிறது தி.மு.க. அரசு. அடக்குமுறை என்றுமே வெற்றி பெற்றதில்லை. ஆட்சியினால் ஏற்படும் நன்மை, தீமைகளை நாள்தோறும் ஆராய்ந்து அதற்கேற்ப செயல்படாதவர் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டை இழப்பார் என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கிணங்க, தி.மு.க. ஆட்சி வீழும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story