இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...10-01-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 10 Jan 2025 11:09 AM IST
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர்கள் வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகின்றனர். இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில் ஜனவரி 17 -ம் தேதி வரை நடைபெறுகிறது.
- 10 Jan 2025 10:36 AM IST
சென்னை - திருநெல்வேலி இடையிலான வந்தே பாரத் ரெயிலின் பெட்டிகளை அதிகரிக்கும் நாள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 11 முதல் 16 பெட்டிகளுடன் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஜனவரி 15ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
- 10 Jan 2025 10:26 AM IST
ஐஐடி மெட்ராஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இளையராஜா, கலை, இசை இல்லையென்றால் இந்தியர்களுக்கு வாழ்க்கையே இல்லை என்று கூறினார்.
- 10 Jan 2025 10:24 AM IST
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை உடனடியாக பதவியில் இருந்து நீக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். கவர்னரின் செயல்பாடு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக உள்ளது. தமிழக கவர்னராக செயல்பட அவருக்கு விருப்பம் இல்லை என்பதையே அவரது செயல்பாடுகள் காட்டுகின்றன. விளம்பரம் தேடும் நோக்கிலேயே செயல்பட்டு வருகிறார் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- 10 Jan 2025 10:21 AM IST
வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் கைது
வெனிசுலாவில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் மரியா கொரினா மச்சாடோவை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற நிக்கோலஸ் மதுரோ அதிகாரத்தில் நீடிப்பதை தடுக்கும் கடைசி முயற்சியின் ஒரு பகுதியாக, எதிர்க்கட்சி தலைவர் மச்சாடோ பொதுவெளியில் தோன்றிய நிலையில் கைது செய்யப்பட்டார். பின்னர் சிறிது நேரத்தில் அவர் விடுவிக்கப்பட்டதாக எதிர்க்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
- 10 Jan 2025 10:20 AM IST
பெரியார் பற்றி அவதூறாக பேசிய நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 11 மாவட்டங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூர், தென்காசி, சேலம், மதுரை, நெல்லை, திண்டுக்கல், உள்ளிட்ட 11 மாவட்டங்களில் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- 10 Jan 2025 10:19 AM IST
சென்னை ஐ.எசி.எப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ‘அம்ரித் பாரத்’ ரெயில் பெட்டிகளை மத்திய ரெயில்வேத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டார்.
- 10 Jan 2025 10:16 AM IST
பொங்கல் சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கிய 10 நிமிடத்தில் டிக்கெட் விற்று தீர்ந்தது. காலை 8 மணிக்கு தொடங்கிய முன்பதிவு சில நிமிடங்களிலேயே நிறைவு பெற்றது. தட்கல் முறையில் டிக்கெட் பெறுவதற்கு பயணிகள் முனைப்பு காட்டி வருகின்றனர். பயணிகள் வசதிக்காக கூடுதலாக 4 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே தரப்பில் கூறப்படுகிறது.
- 10 Jan 2025 10:10 AM IST
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சர்க்கரை ஆலை ஊழியரான செல்வேந்திரன் வீட்டின் கதவை உடைத்து 125 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. வீட்டின் உரிமையாளர் செல்வேந்திரன் திருவெண்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து சம்பவ இடத்தில் திருவெண்காடு காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
- 10 Jan 2025 9:53 AM IST
ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்கும் 25 வயதுக்கு உட்பட்ட தாய்மார்களுக்கு ரூ.81,000 வழங்கப்படும் என ரஷிய அரசு அறிவித்துள்ளது.