இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...10-01-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 10 Jan 2025 6:18 PM IST
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு மக்கள் கிளம்ப தொடங்கியுள்ளனர். இதனால், சென்னை மதுரவாயல், வானகரம் மற்றும் ஜி.எஸ்.டி சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. சென்னை- திருச்சி செல்லும் சாலையிலும் வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன.
- 10 Jan 2025 5:54 PM IST
இந்த ஆண்டு இந்திய பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும்
உலகப் பொருளாதார நிலைமை தொடர்பாக ஐ.நா. சபை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‘இந்தியப் பொருளாதாரம் 2024-ம் ஆண்டில் 6.8 சதவீத வளர்ச்சியடைந்தது, 2025-ம் ஆண்டில் 6.6 சதவீத வளர்ச்சியடையும். 2026-ம் ஆண்டில் 6.8 சதவீத வளர்ச்சிக்குத் திரும்பும்’ என்று கணிக்கப்பட்டுள்ளது. பொருளாதார வளர்சிக்கு தனியார் நுகர்வு மற்றும் முதலீடுகள் துணைபுரியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 10 Jan 2025 5:47 PM IST
சீமான் கருத்து: நடவடிக்கை எடுக்க கோர்ட்டு உத்தரவு
சீமான் கூறும் கருத்துக்கள் சமூகத்தில் பதட்டத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது என்று மதுரை ஐகோர்ட்டு கிளை கூறியுள்ளது. சீமான் தொடர்பான மனுதாரரின் புகாரை பெற்று நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்ட கோர்ட்டு, வரும் 20 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யுமாறும் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.
- 10 Jan 2025 5:09 PM IST
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 14 காசுகள் சரிந்து முதல் முறையாக 86 ரூபாயாக வீழ்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்க டாலர் வலுவாக இருப்பதும் அந்நிய முதலீடுகள் தொடர்ச்சியாக வெளியேறுவதால் ரூபாய் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்
- 10 Jan 2025 4:56 PM IST
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது அண்ணா பல்கலைக்கழக விவகாரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டு இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
- 10 Jan 2025 4:01 PM IST
புதிய கல்விக்கொள்கை பற்றி பலருக்கு புரிதல் இல்லை - கவர்னர் ஆர்.என்.ரவி
புதிய கல்விக் கொள்கை குறித்து பலருக்குப் புரிதல் இல்லை; பிரதமர் மோடி கல்வியை பரவலாக்க விரும்புகிறார். மாநிலங்களில் கல்வி ஆரோக்கியமாக இல்லை. பல்கலை.களில் ஆராய்ச்சி படிப்பு தரமாக இருக்க வேண்டும் என நினைக்கிறோம்- வேலூரில் நடைபெற்ற தென் மண்டல துணைவேந்தர்கள் மாநாட்டில் கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
- 10 Jan 2025 3:06 PM IST
சத்தீஷ்கார் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.