இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-01-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 13 Jan 2025 12:54 PM IST
திமுக உடனான போருக்கு பாஜக தயாராக இல்லை. போர்க்களத்தில் திமுக நேர்மையான போர்வீரன் அல்ல, முதுகில் குத்துபவர்கள் திமுக. பாஜகவின் போட்டியை ஏற்றுக்கொள்ளும் தகுதி திமுகவுக்கு இல்லை. தை பிறந்தால் வழி பிறக்க வேண்டும், தமிழ்நாட்டிற்கு வலி பிறக்கக்கூடாது என தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
- 13 Jan 2025 12:44 PM IST
ஜம்மு காஷ்மீரில் சோனாமார்க் சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். கடல் மட்டத்தில் இருந்து 8,650 அடி உயரத்தில் ரூ.2,700 கோடியில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு மற்றும் பனிச்சரிவு வழிகளை தவிர்த்து சுரங்க பாதை அமைக்கப்பட்டுள்ளது. பிரதமரின் வருகையையொட்டி ஜம்மு காஷ்மீர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- 13 Jan 2025 12:37 PM IST
லட்டு தயாரிக்கும் கவுண்டரில் தீ விபத்து
திருப்பதி மலையில் லட்டு விநியோகிக்கும் மையத்தில் திடீர் தீ ஏற்பட்டது. 47ஆம் எண் மையத்தில் மின்கசிவு காரணமாக தீ பற்றியதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேவஸ்தான மின்சார துறை அதிகாரிகள் உடனடியாக மின்சாரத்தை நிறுத்தி தீயை அணைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- 13 Jan 2025 12:27 PM IST
ஜல்லிக்கட்டு போட்டிக்கான இறுதிகட்ட பணிகள் தீவிரம்
2,035 காளைகள், 1,735 மாடுபிடி வீரர்கள் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்கின்றனர். மது அருந்திவிட்டு வருபவர்களுக்கு மாடுகளை பிடிக்க அனுமதி இல்லை என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. போலி டோக்கன்களை பயன்படுத்தி நுழைய முயற்சிக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வாடிவாசலுக்கு முன்பு தேங்காய் நார்கள் கொட்டுவது, தண்ணீர் தொட்டி வைப்பது, சிசிடிவி கேமரா பொருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- 13 Jan 2025 11:57 AM IST
டெல்லியின் மேற்கு பகுதியில் உள்ள பஸ்சிம் புரி பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். நேற்று இரவு பஞ்சாபி பாக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குடியிருப்பில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
- 13 Jan 2025 11:35 AM IST
ஜப்பான் நாட்டில் பனிக்காலம் தொடங்கியுள்ள நிலையில் ஜப்பானியர்கள் ஐஸ் பாத் எடுத்து வழிபட்டனர்.
- 13 Jan 2025 11:32 AM IST
பொங்கல் பண்டிகை எதிரொலியாக தமிழக சந்தைகளில் பூக்களின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது.
- 13 Jan 2025 11:27 AM IST
வெளிநாட்டு கரன்சி நோட்டுகளை கடத்த முயற்சி- 2 பேர் கைது
மிசோரம் மாநிலத்தில் இருந்து ரூ.1.48 கோடி மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி நோட்டுகளை கடத்த முயன்றதாக, மியான்மர் நாட்டைச் சேர்ந்த இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எல்லை தாண்டிய கடத்தல் நடவடிக்கைகள் குறித்த உளவுத்துறை தகவலைத் தொடர்ந்து, அசாம் ரைபிள் படையினர், மிசோரம் காவல்துறை மேற்கொண்ட சோதனையின்போது இருவரும் சிக்கி உள்ளனர். அவர்கள் கடத்த முயன்ற கரன்சி நோட்டுகள் மற்றும் இரண்டு செல்போன்கள், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- 13 Jan 2025 11:27 AM IST
சென்னை,செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பகல் 1:50 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 13 Jan 2025 11:24 AM IST
சென்னை மெட்ரோ ரெயில் 2ம் கட்ட திட்டத்தில், கோயம்பேடு - ஆவடி வரையிலான புதிய வழித்தடத்தை பட்டாபிராம் வரை நீட்டிக்க திட்டம் என தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.
பட்டாபிராம் வரை நீட்டிக்கப்பட்டால் சீரமைப்பு நீளம் சுமார் 20 கி.மீ. ஆக அதிகரிக்கும். இதற்கு ரூ.6,500 கோடி வரை கட்டுமானச் செலவாகலாம் என கணிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு-ஆவடி மெட்ரோ ரெயில் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை ஜனவரி இறுதிக்குள் தயாராகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.