இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 06-01-2025


இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 06-01-2025
x
தினத்தந்தி 6 Jan 2025 9:11 AM IST (Updated: 6 Jan 2025 10:45 PM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

சென்னை


Live Updates

  • 6 Jan 2025 3:22 PM IST

    ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் விமான தாக்குதல் நடத்தியதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. உள்நாட்டில் ஏற்பட்ட தோல்விகளுக்கு அண்டை நாடுகளை குறை கூறுவது பாகிஸ்தானின் பழைய பழக்கம் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.

  • 6 Jan 2025 2:57 PM IST

    ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இரண்டாவது கைது வாரண்ட்.

    இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றம் இரண்டாவது கைது வாரண்டு பிறப்பித்துள்ளது. ஷேக் ஹசீனாவின் ஆட்சியின்போது மர்மமான முறையில் காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்கில் ஷேக் ஹசீனா, அவரது ராணுவ ஆலோசகர், ராணுவ அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் என மொத்தம் 12 பேரை கைது செய்ய உள்நாட்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICT) வாரண்ட் பிறப்பித்துள்ளது. 

  • 6 Jan 2025 1:30 PM IST

    கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண சம்பவம்; 18 பேரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவு ரத்து

    கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 18 பேரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு உள்ளது.

    குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து 18 பேர் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் மீது நடந்த விசாரணையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

  • 6 Jan 2025 12:55 PM IST

    பொங்கல் பண்டிகை; 14,104 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு

    பொங்கல் பண்டிகையையொட்டி 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். இதுபற்றி அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, 10, 11, 12, 13 ஆகிய நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

    சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கும், பிற மாவட்டங்களுக்கு இடையேயும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்ப வசதியாக 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை 15,800 பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

  • 6 Jan 2025 12:13 PM IST

    கவர்னர் உரையாற்ற கூடாதென்று திட்டமிட்டு அவரை வெளியேற வைத்துள்ளனர் - எடப்பாடி பழனிசாமி

    செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, "கவர்னர் புறக்கணித்துச் செல்லவில்லை. அவர் உரையாற்ற கூடாதென்று திட்டமிட்டு அவரை வெளியேற வைத்துள்ளனர். கவர்னர் உரை காற்றடித்த பலூன்போன்று இருப்பதை தவிர உள்ளே முக்கியமான கருத்து எதுவும் இல்லை. கவர்னர் உரையில் தி.மு.க. அரசு சுய விளம்பரம் தேடி உள்ளது" என்று கூறினார்.

  • 6 Jan 2025 12:10 PM IST

    தமிழக சட்டமன்றத்தின் மரபுகளை மாற்ற கவர்னர் முயற்சிக்கிறார் - அமைச்சர் சிவசங்கர்

    சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சிவசங்கர், "தமிழக சட்டசபையில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் பாடுவதுதான் மரபு. தேசிய கீதத்தை அவமதிக்கும் எண்ணம் தமிழக அரசுக்கு எப்போதும் இருந்தது இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை விட தான் பெரியவர் என்ற மனநிலையில் கவர்னர் செயல்படுகிறார். தமிழக சட்டமன்றத்தின் மரபுகளை மாற்ற கவர்னர் முயற்சிக்கிறார்" என்று கூறினார்.

  • 6 Jan 2025 11:55 AM IST

    இந்தியாவில் பெங்களூருவில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி. தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனை ஐ.சி.எம்.ஆர். உறுதி செய்துள்ளது. இந்த 2 குழந்தைகளும் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன. மத்திய சுகாதார துறையும் இதனை உறுதி செய்துள்ளது.

  • 6 Jan 2025 11:35 AM IST

    தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி 11-ந்தேதி வரை நடைபெறும். அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

  • 6 Jan 2025 11:30 AM IST

    கேரளாவில் மாவெள்ளிக்கரா பகுதியை நோக்கி சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த அரசு பஸ் ஒன்று இடுக்கி மாவட்டத்தில் புள்ளுப்பரா என்ற இடத்திற்கு அருகே சென்றபோது 30 அடி ஆழ பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஒரு பெண் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.

  • 6 Jan 2025 11:14 AM IST

    தமிழ்நாட்டில் பெண்கள் அதிக அளவில் பணிபுரியும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின் மொத்த பெண் தொழிற்பணியாளர்களில் 41 சதவீத பெண்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். தமிழ்நாட்டில் நிலவும் அமைதியான, வளர்ச்சிக்கு உகந்த சூழலால் புதிய தொழில் முதலீடுகள் வந்த வண்ணம் உள்ளன.

    போதைப்பொருளுக்கு எதிராக பாரபட்சமற்ற கடுமையான அணுகுமுறையை இந்த அரசு தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், ஆராய்ச்சி, மருத்துவம் போன்ற துறைகளில் அரசு கவனம் செலுத்துகிறது என கவர்னர் உரையில் உள்ள விசயங்களை சபாநாயகர் அப்பாவு வாசித்துள்ளார்.


Next Story