திருவண்ணாமலையில் தேரோட்டம்.. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
தீபத் திருவிழாவின் சிகர நிகழ்வாக, 13-ம் தேதி மாலையில் கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதி உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடக்கிறது. நேற்று இரவு வெள்ளி தேரோட்டம் நடைபெற்றது.
தீபத் திருவிழாவின் 7-வது நாளான இன்று பஞ்ச மூர்த்திகள் 5 தேர்களில் வலம் வரும் மகா தேரோட்டம் நடந்தது. காலை 6.36 மணிக்கு விநாயகர் தேர் புறப்பாடு நடைபெற்றது. ஒருபுறம் ஆண்களும் மறுபுறம் பெண்களும் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். விநாயகர் தேர் நிலைக்கு வந்த பிறகு முருகர் தேரோட்டம் நடைபெற்றது. மதியம் அருணாசலேஸ்வரர் மகாதேரோட்டம் நடைபெற்றது.
தேரோட்டத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர், உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இரவில் பராசக்தி அம்மன் தேரோட்டமும், சண்டிகேஸ்வரர் தேரோட்டமும் நடைபெறுகிறது. அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுப்பார்கள். இந்த தேரின் பின்னால் சண்டிகேஸ்வரர் தேர் இழுக்கப்படும். சண்டிகேஸ்வரர் தேரை சிறுவர், சிறுமியர்கள் இழுப்பார்கள
பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடைபெற்றதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர். ராஜகோபுரம் முன்பு ஏராளமான பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.
தேரோட்டம் நடைபெறும் நாளன்று நேர்த்திக் கடனாக பக்தர்கள் கரும்பில் சேலையால் தொட்டில் கட்டி தங்கள் குழந்தைகளை சுமந்தபடி மாட வீதியை வலம் வருவார்கள். அதன்படி, இன்று இன்று ஏராளமான பக்தர்கள் கரும்பு தொட்டில் அமைத்து மாட வீதியை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விழாவின் சிகர நிகழ்வாக, 13-ம் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் கோவிலில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும்.