திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபம்; கிரிவலப்பாதை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட காவல் துறை
பக்தர்கள் கிரிவலம் செல்ல வழிகாட்டு நெறிமுறைகளை திருவண்ணாமலை மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ளது.
திருவண்ணாமலை,
கார்த்திகை மகாதீபம் நாளை(12.12.2024) தொடங்கவுள்ள நிலையில் போக்குவரத்து நெரிசல் ஏதுமின்றி பக்தர்கள் வந்து கிரிவலம் செல்ல வழிகாட்டு நெறிமுறைகளை திருவண்ணாமலை மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில் கூறியிருப்பதாவது;
திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபத்தை முன்னிட்டு 12.12.2024 முதல் 15.12.2024 வரை போக்குவரத்து நெரிசல் ஏதுமின்றி பக்தர்கள் வந்து கிரிவலம் செல்ல ஏதுவாக 25 தற்காயிக பேருந்து நிலையங்கள் மற்றும் 116 கார் பார்க்கிங் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை மக்கள் அறிந்து, அவற்றை முறையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. பக்தர்கள் தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் கார் பார்க்கிங் இடங்கள் தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட காவல் துறை வாட்ஸ் ஆப்(WhataApp) உதவி எண். 9363622330-ற்கு மெசேஜ்(Message) மூலம் தொடர்பு கொண்டு Google Map Link-ஐ பெற்று Google Map உதவியுடன் அந்தந்த கார் பார்க்கிங் வசதிகளுக்கு செல்லலாம்."
வழிகாட்டு நெறிமுறைகள்:
1. பக்தர்களுக்கு நீர்மோர் வழங்குதல், திலகமிடுதல், ஆசிர்வதித்தல் என்ற போர்வையில் ஏமாற்றியும் மற்றும் மிரட்டியும் பக்தர்களிடமிருந்து பணம் வசூலிப்பது குற்றமாகும். அக்குற்றச் செயல்களை கண்காணிக்க கிரிவலப்பாதையில் பிரத்யேகமாக காவல் அதிவிரைவுப் படை (QRI) ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அக்குற்றம் செயல்களில் ஈடுபடுவோர் உடனடியாக கைது செய்யப்பட்டு கடும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர் என எச்சரிக்கப்படுகிறது.
2. பக்தர்கள் நான்கு கோபுரங்களுக்கு முன்போ, கிரிவலப்பாதையிலோ எங்கும் கற்பூரம் ஏற்றுதல் கூடாது.
3. கால்நடைகளின் உரிமையாளர்கள் தங்கள் கால்நடைகளை கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு இடையூறாக உலாவ விடக்கூடாது.
4.பக்தர்களும் கால்நடைகளுக்கு அகத்திக்கீரை உள்ளிட்டவற்றை வழங்குவதை தவிர்க்கவும். உரிய அனுமதியின்றி அன்னதானம் வழங்குவது தடைசெய்யப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் அன்னதானம் வழங்க அறிவுறுத்தப்படுகிறது.
5. கிரிவலம் செல்லும் பக்தர்கள் தங்களது குழந்தைகளையும் வயதானவர்களையும், பத்திரமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
6. பக்தர்கள் தங்களது செல்போன், ஆபரணங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் ஆகியவற்றை தாங்களே பாதுகாத்து கொள்ள வேண்டும். யாரையும் நம்பி ஒப்படைக்க வேண்டாம். சந்தேகத்திற்கிடமான நபர்களையோ அல்லது பொருட்களையோ கண்டால் உடனடியாக அருகில் உள்ள காவல்துறை அலுவலரிடம் தெரிவிக்கவும்.
7. பக்தர்கள் உதவிக்கு அருகிலுள்(May I Help You Booth) / காவல் உதவி மையத்தை அணுகலாம். கீழ்கானும் அலைபேசி எண்களுக்கும் தொடர்பு கொள்ளலாம். இந்த உதவி எண்கள் 12.12.2024 (07:00 AM) முதல் 15.12.2024 (06:00 PM) வரை 24 மணி நேரமும் செயல்படும்.
I. திருவண்ணாமலை நகர குற்றப்பிரிவு காவல்நிலையம் 04175-222303
II. உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்- 9159616263
III.அவசர உதவி எண் - 9498100431
IV.மாவட்ட காவல் கட்டுபாட்டு அறை எண்- 100
8. பக்தர்கள், கிரிவலப்பாதையை ஒட்டியுள்ள நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்கவும்.
9. கிரிவலப்பாதையில் நிறுவப்பட்டுள்ள தற்காலிக கழிப்பிடங்களை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.
10.குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தவும்.
11. பக்தர்கள், தங்களது காலணிகளை 4 கோபுரங்களுக்கு முன்பும், மாடவீதிகளிலும் விடுவதை தவிர்க்கவும். கடைகள் அல்லது காலணி பாதுகாப்பகங்களில் விட அறிவுறுத்தப்படுகிறது.
12. கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு இடையூறாக தற்காலிக கடைகள் அமைக்க தடை செய்யப்பட்டுள்ளது. மீறும்பட்சத்தில் சட்டபடி நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.
13. கிரிவலப்பாதை மற்றும் மாடவீதிகளில் பக்தர்களுக்கு தொல்லை கொடுக்கும் விதமாக அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களான பீபீ உள்ளிட்டவற்றை விற்பனை செய்வதும், பயன்படுத்துவதும் குற்றமாகும்.
14. பக்தர்களுக்கு இடையூறாக கிரிவலப்பாதை மற்றும் மாட வீதிகளில் உள்ள நிரந்தர கடைகளில் அதிக ஒலியுடன் கூடிய விளம்பர ஆடியோக்கள் ஒலிபரப்ப தடை செய்யப்பட்டுள்ளது.
15. கிரிவலப்பாதையில் தற்காலிகமாக கடைகள் அமைத்தோ, தங்கியோ கேஸ் சிலிண்டர் பயன்படுத்தி சமையல் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது மீறினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சமையல் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படும்.
16. அனுமதியின்றி வனப்பகுதியில் பிரவேசிப்பதும் மலையின் மீது ஏற முயற்சிப்பதும் குற்றமாகும். அந்நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
17. ஏதேனும் உடல் நலக்குறைவு ஏற்படின் அருகில் உள்ள மருத்துவ முகாம்களின் மூலம் மருத்துவ உதவி பெறலாம் உதவிக்கு அருகில் உள்ள காவல் உதவி மையத்தையும் (May I Help You Booth) அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.