தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது - ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
பாலியல் துன்புறுத்தல்களுக்கு துணைபோகும் அரசாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
பத்திரிகைகளை திறந்தாலே பாலியல் துன்புறுத்தல் குறித்த செய்திகள்தான் என்ற அளவுக்கு தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் நிலையை மோசமாகிக் கொண்டே வருகிறது. பள்ளிகள், கல்லூரிகள், பேருந்துகள் என எங்கு பார்த்தாலும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்கு என்ன காரணம் என்றால், பாலியல் துன்புறுத்தல்களுக்கு துணைபோகும் அரசாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது.
சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்த போலி என்.சி.சி. முகாமில் 13 வயது மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். தற்போது கிருஷ்ணகிரி அருகே உள்ள அரசுப் பள்ளியில் பயிலும் 13 வயது மாணவியை அப்பள்ளி ஆசிரியர்களே கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இதைவிட வெட்கக்கேடு ஒன்று இருக்க முடியாது.
இந்தச் சூழ்நிலையில், திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே, மணப்பாறைப்பட்டியில் உள்ள குரு வித்யாலயா என்ற பள்ளியின் நிர்வாகியினுடைய கணவர் அந்தப் பள்ளியின் நான்காம் வகுப்பு அறைக்குள் நேற்று முன்தினம் நுழைந்து அங்கு பயிலும் மாணவியர் சிலரை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும், இதற்கு மாணவியர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இதை யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியதாகவும் செய்தி வந்துள்ளது பேரதிர்ச்சியை அளிக்கிறது. இது தொடர்பான வீடியோ வைரலாக பரவி வருகின்றது.
பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் குழு, மாணவ, மாணவியருக்கான புகார் பெட்டி, பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் சரிவர செயல்படவில்லை என்றும், அனைத்திலும் அரசியல் தலையீடு தலைவிரித்து ஆடுவதாகவும் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மணப்பாறையில் நடைபெற்ற சம்பவம் நடந்த அதே நாளில், திருப்பதி செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்த கர்ப்பிணிப் பெண்ணிடம் இரண்டு பேர் கொண்ட கும்பல் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், அந்தப் பெண் அவர்களிடமிருந்து தப்பிக்க போராடியபோது, வேலூர் அடுத்த கே.வி. குப்பத்தில் ஓடும் ரெயிலில் இருந்து அந்தப் பெண்ணை கீழே தள்ளிவிட்டதாகவும், அந்தப் பெண் அங்கேயே மயக்கமடைந்த நிலையில் அந்தப் பெண்மணி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.
தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எல்லாம் முதல்-அமைச்சரிடமிருந்து எவ்விதப் பதிலும் இல்லை. பெண்கள் எல்லாம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிக் கொண்டிருக்கின்ற நிலையில், திருநெல்வேலியில் அல்வாவை சுவைத்துக் கொண்டிருக்கிறார். ரோம் நகர் பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போல முதல்-அமைச்சரின் நடவடிக்கை உள்ளது. மக்கள் தி.மு.க.வுக்கு அல்வா கொடுக்க முடிவெடுத்துவிட்டார்கள் என்பதுதான் கள யதார்த்தம். இது 2026-ம் ஆண்டு தேர்தலில் எதிரொலிக்கும்.
மொத்தத்தில், தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. குற்றம் புரிபவர்களில் பெரும்பாலானோர் ஆளும் தி.மு.க கட்சியை சேர்ந்தவர்களாக இருப்பதால், அவர்களுக்கு காவல் துறையினர் மீது துளியும் அச்சம் இல்லாத நிலை நிலவுகிறது. என்று கூறப்படுகிறது. மாறாக, அவர்களைக் கண்டு காவல் துறை அஞ்சும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த நிலை மாற வேண்டுமென்றால், முதல்-அமைச்சர் குற்றம் புரிந்தவர்களை விரைந்து கண்டுபிடித்து அதற்குரிய தண்டனையை உடனடியாக பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.