இன்ஸ்டாகிராமில் பழகிய மாணவியிடம் வீடு புகுந்து பாலியல் சீண்டல் - தேனி வாலிபர் கைது


இன்ஸ்டாகிராமில் பழகிய மாணவியிடம் வீடு புகுந்து பாலியல் சீண்டல் - தேனி வாலிபர் கைது
x

மாணவியை பார்ப்பதற்காக தேனியில் இருந்து அவரது வீட்டிற்கு அமல்ராஜ் வந்துள்ளார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகாவுக்கு உட்பட்ட கிராமத்தில் வசிக்கும் 15 வயது மாணவி அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும் தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா கூடலூர் கிராமத்தைச் சேர்ந்த விமல்ராஜ் (வயது 19) என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் இருவரும் தங்களது செல்போன் எண்ணை பரிமாறிக்கொண்டு அடிக்கடி பேசி பழகி வந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து நேற்றுமுன்தினம் விமல்ராஜ், மாணவியை பார்ப்பதற்காக தேனியில் இருந்து அவரது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் மாணவி தனியாக இருந்ததை பார்த்த விமல்ராஜ், திருமணம் செய்து கொள்ளலாம் என ஆசைவார்த்தை கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர். அந்த வாலிபரை மடக்கி பிடித்து பிரம்மதேசம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து மாணவியின் தாயார் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விமல்ராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.


Next Story