234 தொகுதிகளிலும் சூறாவளி சுற்றுப்பயணம்: எடப்பாடி பழனிசாமி


234 தொகுதிகளிலும் சூறாவளி சுற்றுப்பயணம்: எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 15 Dec 2024 1:59 PM IST (Updated: 15 Dec 2024 7:33 PM IST)
t-max-icont-min-icon

234 தொகுதிகளிலும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னை,

சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசியதாவது;

"நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு அதிமுக மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. கூட்டணி சரியாக அமையவில்லை என கூறினார்கள். கூட்டணி வரும், போகும். ஆனால் கொள்கை நிலையானது. தமிழகத்தில் தனித்து நின்று ஆட்சியை அமைத்த ஒரே கட்சி அதிமுக தான் 2021ஆம் ஆண்டு 1.98 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் திமுக ஆட்சியில் அமர்ந்தது.

500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் கொடுத்து பச்சை பொய் சொல்லி மக்களை ஏமாற்றிய கட்சி திமுக தான். தமிழகத்தில் நிதி நிலைமை படு பாதாளத்திற்கு சென்றுவிட்டது. இன்று விலைவாசி உயர்ந்துவிட்டது. திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. திமுக ஆட்சியில் 50க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரசு குழு அரசாகவே உள்ளது.

சட்டப்பேரவை நாட்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. இதற்கு காரணம் பயம்தான். அதிமுகவை பார்த்து ஆளுங்கட்சிக்கு பயம் வந்துவிட்டது. சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை என்பார்கள். ஆனால் நான் பேசும்போது கட் செய்கிறார்கள். சட்டப்பேரவையில் நான் பேசியதை ஒளிபரப்பி இருந்தால் திமுக அரசே இருந்திருக்காது.

200 தொகுதிகளில் வெற்றி என திமுக பகல் கனவு காண்கிறது. அதிமுகவின் எழுச்சி, 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி. 2026 தேர்தலில் அதிமுக தலைமையில் அமைக்கப்படும் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியில் அமரும்.

234 தொகுதிகளிலும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் அனைவரும் எதிர்பார்க்கும் கூட்டணி அமையும். 2026 சட்டமன்ற தேர்தல் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக இருக்கும்"

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story