மத்திய அரசு அறிவித்துள்ள 944 கோடி ரூபாய் போதுமானதாக இருக்காது: துணை முதல்-அமைச்சர் உதயநிதி
புயல் பாதிப்புகளுக்கு மத்திய அரசு கொடுத்துள்ள நிதி போதுமானது இல்லை என்று துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வேலூர்,
பெஞ்சல் புயல் காரணமாக அதிக கனமழை பெய்ததால் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு பெரும் சேதத்தையும் உண்டாக்கியது. இந்நிலையில் புயல் பாதிப்புகளுக்காக இடைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடியை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமர் மோடிக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். மேலும் மத்திய அரசின் பல்துறை குழுவை அனுப்பி சேத விவரங்களை கணக்கிட வேண்டும் என்றும் அதில் கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில் தமிழக வெள்ள சேதங்களை நேரில் பார்வையிட மத்தியக்குழுவினர் நேற்று மாலை சென்னை வந்தநிலையில், தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினர். அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் வெள்ளப்பாதிப்பால் ஏற்பட்ட பேரழிவிற்கு தற்காலிக மற்றும் நிரந்தர மறுசீரமைப்பு பணிகளுக்கு ரூ.6,675 கோடி நிதி வழங்க வேண்டும் என்று கூறி அதற்கான முழு விவரங்கள் அடங்கிய கோரிக்கை மனுவை அவர்களிடம் அளித்தார். மேலும், அவர் மத்தியக்குழுவிடம் தமிழ்நாட்டிற்கு தேவையான நிவாரணப் பணிகள், நிரந்தர மற்றும் தற்காலிக மறு சீரமைப்பு பணிகளுக்காக நிதியினை பெற்றுத்தர விரைந்து பரிந்துரை செய்திட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்நிலையில் இந்த மத்தியக் குழுவினர் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) தமிழகத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்று ஆய்வை தொடங்க உள்ளனர்.
இதனிடையே தமிழ்நாட்டுக்கு 944 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு மத்திய குழுவினர் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், விரிவான ஆய்வுக்குப் பிறகு தேசிய பேரிடர் நிதியிலிருந்து கூடுதல் நிதி உதவி வழங்கப்படும் என்றும் மத்திய அரசு உறுதியளித்திருந்தது.
இந்நிலையில், புயல் நிவாரண நிதியாக மத்திய அரசு 944 கோடி ரூபாயை அளித்திருப்பது போதுமானதாக இருக்காது என துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "புயல் நிவாரணமாக முதல்-அமைச்சர் ரூ.2 ஆயிரம் கோடி கேட்டிருந்தார். ஆனால், மத்திய அரசு 944 கோடி ரூபாய் கொடுத்துள்ளது. இது நிச்சயம் போதுமானதாக இருக்காது" என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
முன்னதாக வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட துணை முதல்-அமைச்சர் உதயநிதி திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், ஆர். காந்தி, வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலட்சுமி, ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் சந்திரகலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.