'விடுதலை 2' திரைப்படம் முக்கியமான அரசியலைப் பேசியுள்ளது - திருமாவளவன் பேட்டி


விடுதலை 2 திரைப்படம் முக்கியமான அரசியலைப் பேசியுள்ளது - திருமாவளவன் பேட்டி
x

தேவையான காலச்சூழலில் 'விடுதலை 2' திரைப்படம் வெளியாகியுள்ளது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னை,

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் 'விடுதலை' படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், பிரகாஷ்ராஜ், சேத்தன், மூணார் ரமேஷ், பவானிஶ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், 'விடுதலை 2' படத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார். விடுதலை 2 திரைப்படத்தை பார்த்தபின் இயக்குநர் வெற்றி மாறன் மற்றும் விஜய் சேதுபதியுடன் இணைந்து திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இயக்குநர் வெற்றிமாறனின் விடுதலை 2 திரைப்படம் முக்கியமான அரசியலைப் பேசியுள்ளது; விடுதலை 2 திரைப்படம் தமிழ்த் திரையுலகின் முக்கியமான படைப்பு. தேவையான காலச்சூழலில் 'விடுதலை 2' திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்தியாவில் வலதுசாரி அரசியல் நாளுக்கு நாள் வலுப்பெற்று வரும் சூழலில், இடதுசாரி அரசியலின் தேவையை இளைஞர்களுக்கு உணர்த்தக்கூடிய வகையில் உள்ள மகத்தான படைப்பு விடுதலை 2.

தமிழ்த் தேசியம் என்பது உணர்வு மட்டுமல்ல; அது விரிவானது, ஆழமானது, வலுவானது. ஆதிக்கம், சுரண்டல், ஒடுக்குமுறை எந்த வடிவில் இருந்தாலும் அதை எதிர்க்க வேண்டும். கொள்கை கோட்பாடு என்று சொல்லும் கருத்தியலை விடுதலை 2 காட்டுகிறது. கோட்பாடு இல்லாத தனிநபர்கள் தன்னை பின்பற்றுவோரை போராளிகளாக வளர்த்தெடுக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story