தமிழ்நாடு வளர்ந்து வருவதை கண்டு கவர்னரால் ஜீரணிக்க முடியவில்லை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
திட்டமிட்டு விதிமீறல் செய்வதில் கவர்னர் ஆர்.என்.ரவி குறியாக உள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு சட்டசபையில் கவர்னர் உரை மீதான விவாதத்தின் மீது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளித்து வருகிறார்.
அப்போது பேசிய அவர், "அரசியலமைப்பு சட்டப்படி ஆண்டின் தொடக்கத்தில் கவர்னர் சட்டசபையில் உரையாற்ற வேண்டும். அபத்தமான காரணங்களைக் கூறி சட்டசபையில் உரையை வாசிக்காமல் கவர்னர் சென்றார்.
2022-ல், இப்போது இருக்கும் கவர்னர் தனது உரையை முழுமையாக வாசித்தார், எதையும் மாற்றவில்லை. ஆனால் இந்த 3 ஆண்டு காலமாக அபத்தமான காரணங்களை கூறி உரை படிப்பதை தவிர்த்தார் என அவையில் உள்ள அனைவருக்கும் தெரியும்.
தமிழ்நாடு வளர்ந்துவருவதை கண்டு அவரால் ஜீரணிக்க முடியவில்லை என நினைக்கிறேன். சட்டமன்றத்தின் மாண்பையும் மதிக்காமல், மக்களின் எண்ணங்களுக்கும் மதிப்பளிக்காமல் தமிழ்த் தாய் வாழ்த்தை அவமானப்படுத்த துணிந்ததின் மூலமாக அவர் வகிக்கும் பதவிக்கு இழுக்கு ஏற்படும் காரியத்தை கவர்னர் செய்துவருவது, இந்த பேரவை இதுவரை காணாத ஒன்று.. இனியும் காணக் கூடாது" என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.