அவசியம் என்றால் வனங்களில் சாலை அமைக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்

கோப்புப்படம்
வனங்களில் சாலை அமைக்க தேவையான பணிகளை மேற்கொள்ள முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
சென்னை,
தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான 4வது நாள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டசபை உறுப்பினர்களின் தொகுதி சார்ந்த கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.
இந்நிலையில் கேள்வி நேரத்தின் போது, ஒகேனக்கல் - பென்னாகரம் - தருமபுரி - திருப்பத்தூர் வரை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தப்படுமா என்று பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் எ.வ.வேலு, "வனத்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் தடையில்லா சான்று பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் தடையில்லா சான்று பெற்றதும் சாலை விரிவாக்க பணிகள் நடைபெறும்" என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய வனத்துறை அமைச்சர் பொன்முடி, "அவசியம் என்றால் வனங்களில் சாலை அமைக்க தேவையான பணிகளை மேற்கொள்ள முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும், துறைகளுடன் இணைந்து பேசி இதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்" என்றும் தெரிவித்தார்.