தஞ்சாவூர்: ஆசிரியை கொலை செய்யப்பட்ட பள்ளியில் டி.ஐ.ஜி நேரில் ஆய்வு

தஞ்சாவூரில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட அரசு பள்ளியில் டி.ஐ.ஜி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
தஞ்சாவூர்,
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் ரமணி (26). இந்த நிலையில் ரமணி வழக்கம்போல் இன்று வகுப்பறையில் பாடம் நடத்திவிட்டு ஆசிரியர் ஓய்வு அறையில் இருந்தபோது திடீரென அறைக்குள் நுழைந்த நபர் ஆசிரியை ரமணியை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் நிலைகுலைந்து போன ஆசிரியையை சக ஆசிரியர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற நிலையில் வழியிலேயே ரமணி உயிரிழந்தார்.
ஆசிரியை ரமணியை குத்திக் கொன்றதாக சின்னமனை கிராமத்தை சேர்ந்த மதன்குமார்(28) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ரமணியை காதலித்து வந்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ரமணியின் பெற்றோர் திருமணத்திற்கு மறுத்ததால் ஆத்திரத்தில் மதன்குமார் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையடுத்து மதன்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சாவூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், ஆசிரியை கொலை செய்யப்பட்ட பள்ளியில் தஞ்சை மாவட்ட சரக டி.ஐ.ஜி. ஜியாவுல் ஹக் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, இந்த சம்பவம் நடந்த அரை மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. முதற்கட்ட விசாரணையில் இருவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்றும் ஒன்றாக பழகி வந்த இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்துள்ளது. இதனால் மதன் ரமணியை கத்தியால் குத்தியுள்ளார். அதேபோல இந்த சம்பவம் ஆசிரியர் ஓய்வு அறையில் நடந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.