தைப்பூசத் திருவிழா: கோவை-பழனி-திண்டுக்கல் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரெயில்
கோயம்புத்தூர் - திண்டுக்கல் இடையே பழனி வழியாக முன்பதிவு இல்லா சிறப்பு மெமு ரெயில் இயக்கப்பட உள்ளது.
திண்டுக்கல்,
பழனி தண்டாயுதபாணி கோவில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக கோயம்புத்தூர் - திண்டுக்கல் இடையே பழனி வழியாக முன்பதிவு இல்லா சிறப்பு மெமு ரெயில் இயக்க தெற்கு ரெயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, கோயம்புத்தூர் - திண்டுக்கல் முன்பதிவில்லா சிறப்பு மெமு ரெயில் (06106) பிப்ரவரி 4 முதல் 14 -ந்தேதி வரை ஞாயிற்றுக்கிழமை தவிற, மற்ற அனைத்து நாட்களுக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இந்த ரெயில், கோயம்புத்தூரில் இருந்து காலை 09.35 மணிக்கு புறப்பட்டு மதியம் 01.10 மணிக்கு திண்டுக்கல் வந்து சேரும். மறு மார்க்கத்தில் திண்டுக்கல் - கோயம்புத்தூர் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (06107) இதே நாட்களில் திண்டுக்கல்லில் இருந்து மதியம் 02.00 மணிக்குப் புறப்பட்டு மாலை 05.50 மணிக்கு கோயம்புத்தூர் சென்று சேரும்.
இந்த ரெயில்கள் போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.