குடிநீர் வடிகால் வாரிய ஆய்வகத்தில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களை பணி நிலைப்படுத்த வேண்டும் - சீமான்
குடிநீர் வடிகால் வாரிய ஆய்வகத்தில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களை தமிழக அரசு பணி நிலைப்படுத்த வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் இயங்கி வரும் 113 நீர் பரிசோதனை ஆய்வுக்கூடங்களில் கடந்த 15 ஆண்டுகளாக பணிபுரியும் 828 பணியாளர்களைப் பணி நிலைப்படுத்தாமல் காலம் கடத்திவரும் தமிழ்நாடு அரசின் கொடுஞ்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. மக்களின் நலன் காக்கும் நல்ல குடிநீர் வழங்குவதற்கான பணிகளைச் செய்யும் தொழிலாளர்கள், அடிப்படை உரிமைகள் கேட்டு பத்தாண்டுகளாக வீதியில் இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளியிருப்பது மிகுந்த மன வேதனையளிக்கிறது.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத் தொழிலாளர்கள் கடந்த 15 ஆண்டுகளாகப் பணியாற்றியும், தமிழ்நாடு அரசு அவர்களை இதுவரை பணி நிலைப்படுத்தாமலும், உரிய ஊதியம் வழங்காமலும் அவர்களின் உழைப்பை உறிஞ்சி வருவது ஏற்கவே முடியாத பெருங்கொடுமையாகும். தங்களின் அடிப்படை உரிமைகளுக்காக குடிநீர் வடிகால் ஆய்வக ஊழியர்கள் பல்வேறு அறப்போராட்டங்களை முன்னெடுத்த பிறகும், அதனை நிறைவேற்ற மறுப்பது, திமுக அரசு குடிநீர் வடிகால் ஆய்வகத் தொழிலாளர்களுக்குச் செய்கின்ற பச்சைத் துரோகமாகும்.
ஆகவே, தமிழ்நாடு அரசு உடனடியாக குடிநீர் வடிகால் வாரிய ஆய்வகத்தில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களைப் பணி நிலைப்படுத்துவதோடு, உரிய ஊதியம் உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தரவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.