கடன் வாங்குவதில் தமிழகம் முதலிடம்; இதுதான் தி.மு.க.வின் சாதனை - எடப்பாடி பழனிசாமி
மறைந்த தலைவர்கள் குறித்து அவதூறாக பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை,
சென்னையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த நிலையில் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
4 ஆண்டு கால ஆட்சியில் 80 சதவீத வாக்குறுதிகளை கூட தி.மு.க. நிறைவேற்றவில்லை. தேர்தல் பிரசாரத்தின் போது நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என வாக்குறுதி கொடுத்தார்கள்; இப்போது அது என்ன ஆனது?' மத்திய அரசு தான் நீட் தேர்வை ரத்து செய்ய முடியும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கையை விரித்து விட்டார். நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களையும், பெற்றோர்களையும் ஏமாற்றி தி.மு.க. அரசு இரட்டை வேடம் போடுகிறது.
தி.மு.க. ஆட்சி காலத்தில் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு குறித்து முதல்-அமைச்சர் வாய் திறக்கவில்லை. ஓட்டை, உடைசல் பேருந்துகளுக்கு எல்லாம் ஸ்டாலின் பெயர்தான். அதை அவரே ஒப்புக் கொண்டார். தி.மு.க. ஆட்சியில் மழை காலத்தில் பேருந்திற்குள் குடை பிடித்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு பேருந்தின் முன்பும் பின்பும் லிப்ஸ்டிக் அடித்து, அந்த பேருந்துகளில் ஏறினால் மட்டுமே பெண்களுக்கு இலவச பயணம் என்கின்றனர்.
அரசு வருவாயை அதிகரித்து மகளிர் உரிமைத் தொகை கொடுக்கவில்லை. பல்வேறு வகைகளில் கடன்பெற்றே மாதம் ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை கொடுக்கப்படுகிறது. கடன் வாங்கி யார் வேண்டுமானாலும் பணம் கொடுக்க முடியும். கடன் வாங்கி மகளிர் உரிமைத் தொகை கொடுத்தால் மக்கள் மீதான சுமை அதிகரிக்கும். நாட்டிலேயே கடன் வாங்குவதில் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது. இதுதான் தி.மு.க.வின் சாதனை.
பெரியார் குறித்து சீமான் பேசியது வருத்தத்திற்குரியது. மறைந்த தலைவர்கள் குறித்து அவதூறாக பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.