பஞ்சாப் சென்ற தமிழக கபடி வீராங்கனைகள் சென்னை திரும்பினர்

பஞ்சாப்பில் தாக்கப்பட்ட தமிழக கபடி வீராங்கனைகள் பத்திரமாக சென்னை திரும்பியுள்ளனர்.
சென்னை,
பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான 2024 - 2025 கபடி போட்டிகள் பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 24-ந்தேதி நடைபெற்றது. பீகார் தர்பங்கா பல்கலை. அணிக்கு எதிரான போட்டியின்போது தமிழக வீராங்கனை மற்றும் நடுவர் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. அத்துடன், நடுவருக்கு ஆதரவாக பீகார் தர்பங்கா பல்கலை., மாணவிகள் வந்தனர். இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டதால், விளையாட்டு களம் பரபரப்பானது. கபடி போட்டியில் தமிழக வீராங்கனைகள் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அரசியல் தலைவர்கள் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இதற்கிடையே, கபடி வீராங்கனைகள் (மாணவிகள்) பத்திரமாக உள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்தது. சம்பவம் நடைபெற்று 3 மணி நேரத்திற்குள்ளாகவே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாகவும், வீராங்கனைகள் பத்திரமாக சென்னை திரும்புவார்கள் என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கபடி போட்டியில் தாக்கப்பட்ட தமிழக கபடி வீராங்கனைகள் பத்திரமாக சென்னை திரும்பியுள்ளனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், "தாக்குதல் நடத்தப்பட்டபோது பாதுகாப்பற்ற சூழலில் இருந்தோம். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பின்னர்தான் நிலைமை மாறியது. தமிழக அரசின் தலையீட்டால் நாங்கள் பாதுகாப்பாக டெல்லி அழைத்து செல்லப்பட்டோம். டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டு பாதுகாப்பாக சென்னை அழைத்து வரப்பட்டோம்." என தெரிவித்தனர்.