இந்தியாவின் மருத்துவ தலைநகரமாக தமிழ்நாடு திகழ்கிறது - கவர்னர் உரையில் பெருமிதம்


இந்தியாவின் மருத்துவ தலைநகரமாக தமிழ்நாடு திகழ்கிறது - கவர்னர் உரையில் பெருமிதம்
x
தினத்தந்தி 6 Jan 2025 6:59 PM IST (Updated: 7 Jan 2025 12:51 PM IST)
t-max-icont-min-icon

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் இதுவரை 2 கோடி நபர்கள் பயனடைந்துள்ளனர் என்று கவர்னர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழக சட்டசபையின் இன்றைய நிகழ்வில் கவர்னர் உரையில் இடம்பெற்றிருப்பதாவது:-

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் தமிழ்நாடு இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் தொடர்ந்து திகழ்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், 299 அரசு பொது மருத்துவமனைகள், 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 8,713 துணை சுகாதார நிலையங்களின் மூலம் வலுவான மருத்துவக் கட்டமைப்பை நாம் உருவாக்கியுள்ளோம்.

இதன் மூலம், பல வளர்ந்த நாடுகளுக்கு இணையாக ஒப்பிடக்கூடிய வகையில், தமிழ்நாட்டின் மருத்துவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையிலான விகிதம் 2.5.1000 என்ற உயர் அளவில் அமைந்துள்ளது. அண்மை ஆண்டுகளில் மருத்துவத் துறை கட்டமைப்பு, மருத்துவச் சேவைகளின் மேம்பாடு மற்றும் தரமான மருத்துவச் சேவைகள் அனைவருக்கும் கிடைப்பதை உறுதிசெய்திடத் தேவையான நிதியை அரசு ஒதுக்கி வருகிறது.

இத்தகைய முயற்சிகள் அனைத்தும் மாநிலத்தின் பல்வேறு சுகாதாரக் குறியீடுகளை மேம்படுத்தியுள்ளன. மேலும் உலகெங்கிலும் இருந்து ஆண்டுதோறும் சுமார் 15 லட்சம் நபர்கள் உயர்தர சிகிச்சை பெற்றிட தமிழ்நாட்டிற்கு வருகைபுரிவதற்கும் இவை வழிவகுத்துள்ளன. இதனால், உயர்தர மருத்துவ சிகிச்சைகளை சிறப்பாக வழங்கி, இந்தியாவின் மருத்துவத் தலைநகரமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது.

மக்கள் தங்கள் இல்லங்களிலிருந்தே கட்டணமில்லா மருத்துவச் சேவைகளை எளிதில் பெறும் வகையில், தமிழ்நாடு அரசு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வரும் மக்களைத் தேடி மருத்துவம் என்ற முன்னோடித் திட்டத்திற்காக, 2024-ம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகளின் முகமைகளுக்கு இடையேயான விருது என்ற மிகப்பெரிய அங்கீகாரத்தை ஐக்கிய நாடுகள் சபை அண்மையில் தமிழ்நாட்டிற்கு வழங்கிச் சிறப்பித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 2 கோடி நபர்கள் பயனடைந்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story