"இந்தியாவுக்கே முன்னோடியாக தமிழ்நாடு திகழ்கிறது.." - நிதியமைச்சர் தங்கம் தென்னரசு


இந்தியாவுக்கே முன்னோடியாக தமிழ்நாடு திகழ்கிறது.. - நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
x
தினத்தந்தி 14 March 2025 4:44 AM (Updated: 14 March 2025 4:47 AM)
t-max-icont-min-icon

இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு, இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும் என்று தங்கம் தென்னரசு கூறினார்.

சென்னை,

2025-26ம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்கிறார். முன்னதாக மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் அமைச்சர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.

2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ளார். தொடர்ந்து தமிழக பட்ஜெட் உரையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வாசித்து வருகிறார்.

அப்போது பேசிய அவர், "இந்தியாவில் 2ஆவது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. எத்தனை தடைகள் வந்தாலும் தமிழ்நாட்டை சமநிலை தவறாமல் வழி நடத்துவோம். பல்வேறு ஆலோசனைகள் வழங்கிய தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி.

தமிழகம் கல்வி, சுகாதாரம் வேளாண்மை, தொழில்துறையை மேம்படுத்த நடவடிக்கைகளை ஏற்கனவே தொடங்கி உள்ளது. ஏழை எளிய மக்களுக்காக குடியிருப்புகள் உருவாக்க தனி வாரியம் உருவாக்கியவர் கருணாநிதி

மதிய, காலை உணவு திட்டங்களை உலக நாடுகள் பாராட்டுகின்றன. இந்தியாவுக்கே முன்னோடியாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு வழிகாட்டும் வகையில் நிதிநிலை அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.

28 மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட 500 தமிழ் இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க திட்டம். அடுத்த 5 ஆண்டுகளில் ஆண்டுக்கு 100 நூல்கள் மொழிபெயர்க்கப்படும். பழமையான ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு. வெளிநாடுகளிலும் புத்தக கண்காட்சி நடத்த 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

கணினி தமிழ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படும் - பரிசுத்தொகை ஒரு கோடி. இலக்கியங்களை மொழிபெயர்க்க முதல் கட்டமாக 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அகழ்வாராய்ச்சிக்கு 7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

காவேரி பூம்பட்டினம் முதல் நாகை வரை அகழ்வாய்வு. தமிழ்நாட்டில் 8 இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் நடத்தபடுகிறது. 40 கோடியில் எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் சிந்துவெளி பண்பாட்டு அருங்காட்சியகம் ஏற்படுத்தப்படும்.

இரும்பின் உறுதியோடு, உரக்கச் சொல்வோம். இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு, இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும். சிங்கப்பூர், துபாய், மலேசியாவில் தமிழ் புத்தகக் காட்சி நடத்த ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மகளிர் நலன் சார்ந்த அறிவிப்புகள்

விடியல் பயணம் காரணமாக பேருந்து பயணம் செய்யும் பெண்களின் சதவீதம் 60 வரை உயர்ந்துள்ளது.

மாதம் 888 ரூபாயை பெண்கள் சேமிப்பதாக திட்டக்குழு அறிக்கை கூறுகிறது.

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதியவர்கள் விண்ணப்பிக்க உரிய வாய்ப்பு விரைவில் வழங்கப்படும்.

மகளிர் நலத் திட்டங்களுக்கெல்லாம் மகுடம் வைத்தது போல் அறிவிக்கப்பட்ட 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்' மூலம் ஒவ்வொரு மாதமும் ஒரு கோடியே பதினைந்து இலட்சம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களுடைய வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினால் பயன்பெறும் இல்லத்தரசிகளுக்கு, மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் என்பது, அவர்களுடைய அன்றாட வாழ்க்கைக்குப் பேருதவியாக இருப்பது மட்டுமன்றி, அவர்கள் கணிசமாக சேமிக்கவும் வழிவகுக்கிறது.

இதுவரை, மகளிர் உரிமைத்தொகை பெற்றிடாத தகுதிவாய்ந்த இல்லத்தரசிகள், இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திட உரிய வாய்ப்புகள் விரைவில் வழங்கப்படும். மகளிர் நலன் காக்கும் இத்திட்டத்திற்காக இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 13,807 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையின் அனைத்து பகுதிகளுக்கும் சமமான நீர் வழங்க நடவடிக்கை. சமச்சீரான குடிநீர் விநியோகத்திற்காக முதன்மை சுற்றுக் குழாய் திட்டம் .ரூ.602 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். சமச்சீரான குடிநீர் விநியோகத்திற்காக ரூ.2423 கோடியில் முதன்மை சுற்றுக் குழாய் திட்டம். புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தென்காசி, தூத்துக்குடி, ஈரோடு, திருவள்ளூரில் கூட்டுக் குடிநீர் திட்டங்கள்.

பணிபுரியும் பெண்களின் வசதிக்காக மேலும் 10 இடங்களில் தோழி விடுதிகள் கட்டப்படும். மாவட்டம்தோறும் இவ்வகை விடுதிகள் அமைக்கும் இலக்கை நோக்கி அரசு செல்கிறது. மூன்றாம் பாலினத்தவரின் சமூக மேம்பாட்டை உறுதி செய்ய, உயர்கல்வி செல்லும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மாதம் ரூ.1.000 வழங்கப்படும். ஊர்க்காவல் படையில் மூன்றாம் பாலினத்தவர்களை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

மூன்றாம் பாலினத்தவர்

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உரிய விழிப்புணர்வினையும், வேலைவாய்ப்புகளில் சம வாய்ப்பையும் வழங்குவதன் மூலமே, அவர்களுடைய கண்ணியமான வாழ்வினை உறுதிசெய்திட முடியும் என்று இந்த அரசு உறுதியாக நம்புகிறது. இந்த உயர் நோக்கத்தினை முன்னிறுத்தி, ஓர் முன்னோடி முயற்சியாக மூன்றாம் பாலினத்தவரை, போக்குவரத்து மேலாண்மை, திருவிழாக் காலங்களில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் வகையில், உரிய பயிற்சிகள் வழங்கி ஊர்க்காவல் படையில் ஈடுபடுத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக, 50 மூன்றாம் பாலினத்தவர்களைக் கொண்டு, சென்னை, தாம்பரம், ஆவடி மாநகரங்களில் இம்முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு பணிபுரியும் மூன்றாம் பாலினத்தவரின் மதிப்பூதியம், பயிற்சி மற்றும் சீருடை போன்றவை ஊர்க்காவல் படையினருக்குச் சமமான வகையில் வழங்கப்படும். இந்த முன்னோடி முயற்சி மூலம், மூன்றாம் பாலினத்தவர்களின் சுயமரியாதையுடன் கூடிய வாழ்வு உறுதி செய்யப்படுவதுடன், அவர்கள் சமூக நீரோட்டத்தில் இரண்டறக் கலந்து வாழ்வதற்கான வாய்ப்பும் ஏற்படும்.

மூத்த குடிமக்கள் நலன்

முதுமை மானுட வாழ்வின் தவிர்க்க இயலாத கட்டமாகும். தனிமை, மருத்துவ நலன் மற்றும் பொருளாதாரச் சார்பு உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொள்ள நேரிடும் மூத்த குடிமக்களின் முழுமையான பராமரிப்பிற்கென, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, வேலூர், தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாநகராட்சிகளில் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 25 அன்புச்சோலை மையங்கள் அமைக்கப்படும்.

இந்தப் பகல்நேரப் பாதுகாப்பு மையங்களில் முதியவர்கள் தோழமை உணர்வுடனும் பயனுள்ள பணிகளிலும் ஈடுபடலாம். பகல்நேரப் பராமரிப்பு உதவி, அத்தியாவசிய மருத்துவப் பராமரிப்புக்கான ஏற்பாடுகள் மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் துணையுடன் இந்த அன்புச்சோலைகள் வழங்கும்.

முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம்

சங்ககாலத்தைச் சேர்ந்த குறுநில மன்னர் ஒருவர் ஏழை எளியோரின் பசியைப் போக்கியதால், பசிப்பிணியைப் போக்கிய மருத்துவராகப் போற்றப்படுகிறார். அம்மரபின் வழிவந்து, தமிழ்ச் சமூகத்தை வழிநடத்திய தலைவர்கள் பலரும் காலந்தோறும் வறுமையை அகற்றிடவும், மாணவர்களின் கல்வி நலன்களைப் பாதுகாத்திடவும் பல முன்னோடித் திட்டங்களை அறிமுகப்படுத்தி வந்துள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, "பள்ளிக் கல்வியை மேலும் பரவலாக்கவும், கற்றலை இனிமையாக்கவும் எல்லாக் குழந்தைகளும் பசியின்றிக் கல்வியறிவு பெற்றிடவும் எந்தத் தியாகத்தையும் செய்திடுவோம்" என்று அறிவித்த முதல்-அமைச்சர் அவர்களின் உன்னத நோக்கத்தினை உள்வாங்கி அறிமுகப்படுத்தப்பட்ட முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம்' வாயிலாக, தமிழ்நாட்டிலுள்ள 30,992 அரசுப் பள்ளிகளிலும், ஊரகப் பகுதிகளில் அமைந்துள்ள 3,995 அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 17.53 இலட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்னர் மாணவர்களின் வருகை உயர்ந்துள்ளதோடு, அவர்களின் ஊட்டச்சத்தும் கற்றல் திறனும் மேம்பட்டுள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நாட்டிலேயே முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டம், தமிழ்நாட்டின் நகரப் பகுதிகளில் இயங்கிவரும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மேலும் 3.14 இலட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில், வரும் கல்வியாண்டு முதல் மேலும் விரிவுபடுத்தப்படும். இத்திட்டத்தினைச் செயல்படுத்துவதற்காக வரும் நிதியாண்டில் 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசி வருகிறார்.

இதனிடையே பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். பேச அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.


Next Story