தமிழக சட்டசபை மறுதேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு


தமிழக சட்டசபை மறுதேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு
x

சட்டசபையில் நேற்று முன்தினம் 10 சட்ட மசோதாக்களும், நேற்று 9 மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட்டன.

சென்னை

தமிழக சட்டசபை கூட்டம் நேற்று முன்தினம் கூடி 2 நாட்கள் நடந்தது. முதல் நாளில் மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் எடுப்பதற்கான ஏல அனுமதியை எதிர்த்து தமிழக அரசு தீர்மானம் கொண்டு வந்தது. சட்டசபையில் ஆளும் தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சியான அ.தி.மு.க. இடையே காரசார மோதல் ஏற்பட்டது.குறிப்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் நேரடியாக வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். டங்ஸ்டன் ஏல அனுமதி, செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு உள்ளிட்ட அம்சங்களில் ஏற்பட்ட கருத்து மோதல், சட்டசபையில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே நேற்று பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். சட்டசபையில் நேற்று முன்தினம் 10 சட்ட மசோதாக்களும் நேற்று 9 மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட்டன. இந்த 19 மசோதாக்களும் நேற்று ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டன. அதுபோல கூடுதல் செலவினங்களுக்காக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் சட்டசபையை மீண்டும் கூடும் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கும் தீர்மானத்தை அவை முன்னவரும் அமைச்சருமான துரைமுருகன் முன்மொழிந்தார். எம்.எல்.ஏ.க்களின் குரல் வாக்கெடுப்பின் மூலம் அந்த மசோதா நிறைவேறியதை தொடர்ந்து அவையை மறு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.


Next Story