பேரிடர் நிவாரண நிதி: தமிழகம், கேரளா தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது - அப்பாவு குற்றச்சாட்டு


பேரிடர் நிவாரண நிதி: தமிழகம், கேரளா தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது - அப்பாவு குற்றச்சாட்டு
x

கோப்புப்படம் 

தமிழகம், கேரளா தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.

நெல்லை,

நெல்லையில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

கடந்த ஆண்டு நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெய்த கனமழை பாதிப்புகளை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய குழுவினர் வந்து பார்வையிட்டனர். ஆனால், இதுவரை எந்த நிதியும் வழங்கப்படவில்லை.

கடந்த அக்டோபர் 1-ம் தேதி வரை இந்திய அளவில் 14 மாநிலங்கள் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. இதற்காக தேசிய பேரிடர் நிவாரண நிதி வழங்கப்பட்டது. அதில் குஜராத்துக்கு ரூ.600 கோடி, மராட்டியத்திற்கு ரூ.1,492 கோடி, ஆந்திராவுக்கு ரூ.1,200 கோடி வழங்கப்பட்டது. ஆனால், தமிழகத்துக்கும், கேரளாவுக்கும் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒரு பைசா கூட வழங்கப்படவில்லை. தமிழகம், கேரளா தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்னும் நிதி ஒதுக்கப்படவில்லை. மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்துக்கும் இதுவரை நிதி வழங்கப்படவில்லை. அனைவருக்கும் கல்வித் திட்டத்திலும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க நிதி தரவில்லை. தமிழகத்தைச் சேர்ந்தவர்தான் நிதி மந்திரியாக இருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து தமிழகத்தை ஏன் வஞ்சிக்கின்றனர் என தெரியவில்லை.

தமிழகத்தில் தற்போது புயல் காரணமாக மிகப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இதுவரை மத்திய அரசு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story